பதிவு செய்த நாள்
27
செப்
2017
02:09
புதுக்கோட்டை: புதுக்கோட்டை புது பஸ் ஸ்டாண்டில் கேட்பாரற்று கிடந்த, 16 ஐம்பொன் சிலைகள் மற்றும் காமாட்சி விளக்கை வருவாய்த் துறையினர் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை புது பஸ் ஸ்டாண்ட், மதுரை பஸ்கள் நிற்கும் இடத்தில், நேற்று காலை, 7:00 மணியளவில், நகராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியில் ஈடுபட்டனர். அப்போது, கேட்பாரற்று கிடந்த பையை எடுத்து பார்த்தனர். அதில், ஏராளமான சுவாமி சிலைகள் இருந்தன. நகராட்சி கமிஷனர், தாசில்தார் ஆகியோர், சிலைகளை பார்வையிட்டனர். சிலைகள், ஐம்பொன்னால் செய்யப்பட்டதாகவும், 1 முதல், 2 அடி வரையிலும் இருந்தன. விநாயகர், காளி, முருகன் என, 16 சிலைகள் மற்றும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட ஒரு காமாட்சி விளக்கும் இருந்தது. இவற்றை கடத்தி வந்தது யார், எந்த பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்டது, கேட்பாரற்று போட்டது யார் என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.