Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சரஸ்வதி பூஜை செய்யும் முறையும் ... நோய்களை தீர்க்கும் அருமருந்தாகும் கந்தசுவாமி கோவில் திருநீறு! நோய்களை தீர்க்கும் அருமருந்தாகும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செப்.30: சீரடி சாய்பாபா 99வது ஸித்தி தினம்
எழுத்தின் அளவு:
செப்.30: சீரடி சாய்பாபா 99வது ஸித்தி தினம்

பதிவு செய்த நாள்

28 செப்
2017
04:09

சீரடி சாய்பாபா, விஜயதசமி தினத்தன்று மகா சமாதி அடைந்தார். ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று சாய்பாபாவின் மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 99வது சமாதி தினம், விஜயதசமி தினமான வரும் 30-ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது.

சீரடிபாபாவின் தாய், தந்தை யார்? சொந்த ஊர் எது? இயற்பெயர் என்ன? இவை எதுவும் யாரும் அறிந்ததில்லை. பாபா 1854-ம் ஆண்டு, தனது பதினாறாவது வயதில் சீரடிக்கு வருகை புரிந்தார். ஆனால் சில தினங்களில் அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அவர் எங்கு சென்றார் என்பதை யாரும் அறியவில்லை. சில ஆண்டுகன் கழிந்தன. சாந்த் பட்டேல் என்பவர் ஒருமுறை காட்டு வழியில் சென்று கொண்டிருந்தபோது, பக்கீர் போல இருந்த பாபாவை கண்டார். பாபா அவரிடம் இளைப்பாறும்படி கூறினார். அவர்கள் இருவரும் புகைபிடிக்க நெருப்பு தேவையாக இருந்தது. பாபா தன் கையிலிருந்த கத்தியால் நிலத்தை தோண்ட நெருப்பு வந்தது. பிறகு கைத்தடியால் பூமியின் மீது அடிக்க தண்ணீர் வந்தது. மேலும் சில மாதங்களுக்கு முன் காணாமல் போன சாந்த் பட்டேலின் குதிரை இருக்கும் இடத்தையும் பாபா கூறினார். பாபாவின் மகிமையை சாந்த் பட்டேல் புரிந்து கொண்டார். சாந்த் பட்டேல், பாபாவை தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். சில நாட்கள் தன் வீட்டிலேயே பாபாவைத் தங்க வைத்து உபசரித்தார்.

சாந்த் பட்டேல் தன் மைத்துனரின் மகனது திருமண நிகழ்ச்சிக்காக சீரடி சென்றபோது, பாபாவையும் தன்னுடன் சீரடிக்கு அழைத்து சென்றார். பாபாவின் ஒளிபொருந்திய தோற்றத்தைக் கண்ட மகால்சாபதி என்னும் பூசாரி, அவரை சாமி என்று அழைத்தார். சாய் என்றால் பாரசீகத்தில் சுவாமி என்று பொருள். பாபா என்பது இந்தியில் சூஅப்பா’ என்று பொருள். இரண்டும் இணைந்து சூசாய்பாபா’ என்ற திருப்பெயரே நிலைத்துவிட்டது. சாய்பாபா சீரடியிலேயே தங்கிவிட தீர்மானித்தார். சீரடியில் பழமையான மசூதி ஒன்று இருந்தது. அதன் அருகிலுள்ள வேப்ப மரத்தின் அடியில் பாபா அமர்ந்தார். பாபா அமர்ந்திருந்த வேப்பமரத்தின் இலைகளில் அதன் இயல்பான கசப்புச்சுவை மாறியது. சீரடி மக்கள் பாபாவிடம் நீங்கள் யார்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் “நானே அல்லா! நானே சங்கரன்! நானே ஸ்ரீகிருஷ்ணன்! நானே அனுமன்!” என்று கூறினார். ஆமாம்! அவர் இப்பூமியில் இறைஅம்சம் கொண்டவராகவே அவதரித்தார்! சுமார் 12 ஆண்டுகள் தவ வாழ்க்கை மேற்கொண்டு யோகியைப் போல் வாழ்ந்தார் பாபா.

அவரது தெய்வீகத் தன்மையை உணர்ந்தவர்கள் “அவர் ஒரு மகான்” என்று போற்றினார்கள். சிறுவயதில் பாபாவை முகம்மதியப் பெரியவர் ஒருவர் வளர்த்து வந்தார். அந்தப் பெரியவர் பாபா மீது அளவு கடந்த அன்பு வைத்து இருந்தார். பாபாவை விட்டுச் சிறிது நேரம் கூட பிரிந்து இருக்க மாட்டார். அப்படியிருந்த அவர் ஒருநாள் திடீரென்று இறந்து விட்டார். ஆதரவு இல்லாத நிலையில் இருந்த பாபாவை அந்த ஊர் பெரியவர் ஒருவர் அழைத்துச் சென்று கோபால்ராவ் தேஷ்முக் என்பவரிடம் ஒப்படைத்து, இச்சிறுவனைக் கவனித்துக் கொள்ளுங்கள். இவனுக்கென்று யாரும் இல்லை என்றார். கோபால்ராவ் தேஷ்முக் திருப்பதி வெங்கடாசலபதி மீது தீவிர பக்தி கொண்டவர். மக்கள், இவரை மகா ஞானியாகவே கருதி போற்றி வந்தனர். குழந்தையான பாபாவைப் பார்த்த ஞானி கோபால்ராவ் தேஷ்முக்கின் கண்களுக்கு, சாட்சாத் வெங்கடாசலபதியே நேரில் வந்து நிற்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. பாபாவைத் தனது மகனைப் போலவே கருதி வளர்த்து வந்தார். பாபாவும் கோபால்ராவ் தேஷ்முக்கை தமது ஞானகுருவாக எண்ணி அவரிடம் வளர்ந்து வந்தார்.

பாபா ஆன்மீக குருவாக ஏற்றுக் கொண்ட கோபால்ராவ் தேஷ்முக் தீவிர ஏழுமலையான் பக்தர். அதனால் பாபாவிற்கு குரு அருளுடன் வெங்கடேசப் பெருமானின் அருளும் கிடைத்தது. குருவும் சீடனும் மிகவும் அன்புடனும் மதிப்புடனும் மரியாதையுடனும் பேரும் புகழுடனும் இருந்து வந்தது அங்குள்ள சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால் பொறாமை கொண்டனர். ஒரு சமயம் குருவும் சீடனும் தனிமையில் இருக்கும்போது பொறாமை கொண்ட ஒருவன் கல்லால் அடித்தான். அந்தக் கல் பாபாவின் தலையில் பட்டது. தலையில் அடிபட்டவுடன் ரத்தம் கொட்டத் தொடங்கியது. அந்தக் கொடியவன் அத்தோடு நிற்காமல் மறுபடியும் ஒரு கல்லை எடுத்து அடித்தான். இதைக்கண்ட கோபால்ராவ் தேஷ்முக் எங்கே மறுபடியும் கல் பாபாவின் மீது பட்டுவிடுமோ என்று அஞ்சி, பாபாவை மறைத்து முன்னால் வந்து நின்றார். அந்தக் கல் தேஷ்முக் மீது பட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது. “என்னால் தானே உங்களுக்குத் தொந்தரவு உண்டாகிறது. அதனால் என்னை தனியே செல்ல அனுமதி கொடுங்கள்” என்று குருவிடம் பாபா கேட்டார்.

இதைக் கேட்ட குரு மிகவும் மனம் கலங்கினார். அப்போது, “பாபா மனம் வருத்தப்படாதே! உன்னால் உலகத்திற்கு பல நன்மைகள் உண்டாகப் போகிறது. நானோ விரைவில் இந்தப் பூமியை விட்டு நீங்கிச் செல்லப்போகிறவன். அதனால் இறையருளால் எனக்குக் கிடைத்த சகல வரங்களையும் சக்திகளையும் உனக்கு தாரை வார்த்துத் தரப்போகிறேன்” என்று கூறினார். அவர் அதோடு நிற்காமல், உடனே அதை நிறைவேற்றும் பொருட்டு, அருகே இருந்த பசுவிடம் பாலைக் கறந்து வரும்படி கூறினார். குருவின் கட்டளையைக் கேட்ட பாபா, பசுவிடம் பாலைக் கறந்து தரும்படி பசுவின் சொந்தக்காரனைக் கேட்டார். “ஐயா, இப்பசு மலட்டுப்பசு. இதுவரை கன்று ஈனவே இல்லை. ஆனபடியால் இது பால் கறக்காது” என்று சொன்னான் பசுவுக்குச் சொந்தக்காரன். இதைக் கேட்ட பாபா அவனையும் அவனது பசுவையும் குருவிடம் அழைத்துச் சென்றார். குரு பசுவின் மடியில் கைவைத்து தடவிக் கொடுத்தார். என்ன ஆச்சரியம்! மடியில் கைவைத்தவுடன் பால் அதிக அளவில் சுரந்து வந்தது.

பாபா பாலைக் கொண்டு வந்து குருவிடம் கொடுத்தார். பாலைப் பெற்றுக் கொண்ட குரு, “இன்று முதல், இந்த நொடி முதலே எமது எல்லா சக்திகளும் குரு கிருபையும் பரிபூரண மனநிறைவுடன் பாபாவிடம் கொடுக்கிறேன்” என்று கூறி பாபாவிடம் பாலைக் கொடுத்தார். அதே சமயம் பாபாவை கல்லால் அடித்த கயவன் தரையில் வீழ்ந்து இறந்தான். இதைக் கண்ட அவனது தோழர்கள் குருவின் கால்களில் விழுந்து, அவனை மன்னித்து உயிர்ப்பிச்சை அளிக்கும்படி வேண்டினார்கள். இதைக் கேட்ட குரு இவ்வாறு சொன்னார். “இனி எந்தச் சக்தியும் என்னிடம் இல்லை. எது ஆனாலும் பாபாவை வேண்டிக் கேட்டுக் கொள்ளுங்கள்” என்றார். அவர்களும் பாபாவை வேண்டி வணங்கி நின்றனர். பாபாவும் அவர்களைக் கனிவுடன் பார்த்தார். கருணா மூர்த்தியான பாபா தனது குருநாதரின் காலடிபட்ட மண்ணை எடுத்து பிணமாகக் கிடந்தவன் மேல் தூவினார். என்னே அதிசயம்! இறந்து கிடந்த அவன் உயிர் பெற்று எழுந்தான். எழுந்தவன் அப்படியே நெடுஞ்சாண் கிடையாக பாபாவின் கால்களில் விழுந்து தன்னை மன்னித்தருளும்படி வேண்டினான்.

கோபால் ராவ்தேஷ்முக் ஸ்ரீவெங்கடேசப் பெருமானை வேண்டி, தாம் முன்பே கூறியதுபோல தவயோகம் செய்தார். தமது உயிர் பிரிவதற்கு முன்பாக பாபாவை மேற்குத் திசையில் தேச சஞ்சாரம் செய்ய வேண்டினார். தமது குருவின் கட்டளைப்படி மேற்கு நோக்கி வந்து கொண்டு இருந்த பாபா சீரடி கிராமத்தை அடைந்தார். பாபாவின் அருளாலும் கருணையாலும் சீடர்கள் பலர் உருவானார்கள். அப்படி பாபா குருவாக உருவாகி குருவருள் பெற்று சீரடியில் வாழ்ந்து வந்தார். பல ஆண்டுகள் ஒரு யோகியைப் போலவே வாழ்ந்த பாபா பிச்சை எடுத்தே சாப்பிட்டார். தனது மகிமையால் நோயுற்றவர்களின் நோயை குணமாக்கினார். பாபாவின் புகழ் சுற்றுவட்டாரங்களில் பரவத் தொடங்கியது. பல ஞானிகள் வந்து பாபாவைச் சந்தித்தனர். அவர்கள் பாபாவின் தெய்வீகத் தன்மையை தாங்கள் அறிந்ததோடு அதை உலகிற்கும் எடுத்து கூறினார். பாபா தான் தங்கியிருந்த துவாரகாமாயீ என்னும் மசூதியில் விளக்குகள் ஏற்றி வைப்பார். இரு எண்ணெய் வியாபாரிகள் விளக்கிற்கான எண்ணெய் கொடுத்து வந்தனர்.

ஒருநாள் பாபாவின் ஆற்றலை சோதிக்க எண்ணிய அவர்கள் எண்ணெய் தர மறுத்தனர். பாபா தண்ணீரை ஊற்றி விளக்குகள் எரித்தார். இந்நிகழ்ச்சியால் பாபாவின் புகழ் அப்பகுதி முழுவதும் பரவியது. பாபாவைத் தேடி பக்தர்கள் வரத்தொடங்கினர். ராதாகிருஷ்ணமாயி என்னும் பெண்மணி பாபாவின் இருப்பிடத்தை கவனித்துக்கொண்டதோடு, உணவும் சமைத்து வந்தார். பாபாவைத் தேடி எத்தனை பக்தர்கள் வந்தாலும் அவர்கள் அனைவரும் வயிறார உண்ணும்படி அந்த உணவை பெருகச் செய்தார் பாபா. தெய்வீக மகிமை நிறைந்த பாபா குழந்தைகளிடம் குழந்தையாகவே நடந்து கொண்டார். சிரிக்கச் சிரிக்கப் பேசி குழந்தைகளை மகிழச் செய்தார். பாபா பஜனை யையும், பாடல்களையும் விரும்பினார். பக்தர்களிடம் பஜனைகளையும், பாடல்களையும் பாடும் படி உற்சாகமூட்டினார். சில வேளைகளில் பாடல்களுக்கு தக்கபடி பாபா நடனமாடினார். ஏழைகளின் துயரங்களை கண்டு மனம் பொறுக்காதவர் பாபா. ஒரு தாயைப்போல ஏழைகளிடம் நடந்து கொண்டார். தொழு நோயாளிகள் மீது அவர் மிகுந்த இரக்கம் கொண்டிருந்தார். அவர்களது உடலிலுள்ள புண்களை தன் கையாலேயே கழுவி அவர்களுக்கு மருத்துவம் செய்தார். பாபா சாஸ்திரங்களையும் ஐயமறக் கற்று உணர்ந்திருந்தார். பகவத் கீதை, குர்ஆன் போன்றவற்றின் சுலோகங்களுக்கு மிக அற்புதமான விளக்கங்கள் அளித்து பண்டிதர்களைக்கூட வியப்படையத் செய்தார். பாபா மதங்களைக் கடந்து நின்றார். துவாரகாமாயீ மசூதியில் பாபா வீற்றிருந்தார்.

மக்கள் அவரை சாய் மஹராஜ் என்று போற்றி கொண்டாடினார். பாபா மக்களுக்கு கூறிய பொதுவான உபதேசம் நிஷ்டா (நம்பிக்கை)வும் ஸபூரி (பொறுமை)யும் ஆகும். தன்னை நாடி வந்த நோயாளிகளுக்கெல்லாம் ஊதி (விபூதி)யையே பிரசாதமாகத் தந்து, அவர்களின் நோய்களை நீக்கியவர் பாபா. வாழ்வில் பொறுமையும், தன்மீது நம்பிக்கையும் கொண்ட அன்பர்களுக்கு அவர் எப்போதும் துணை நிற்கிறார். துவாரகாமாயீயில் அன்று பாபாவால் மூட்டப்பட்ட நெருப்பு இன்றும் அணையாமல் இருக்கிறது. அந்நெருப்பு குண்டத்திலிருந்து எடுக்கப்படும் உதியே இன்றும் பக்தர்களின் பிரசாதமாக விளங்குகிறது. பாபா தன் பொன்னுடலோடு இப்பூவுலகில் வாழ்ந்த காலத்தில் எண்ணிலடங்காத அற்புதங்கள் புரிந்தார். அவர் 1918ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று முக்தியடைந்தார்.

உதி அளித்து, உபதேசம் செய்து, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அருள்புரிந்த பாபா, தான் கூறியபடியே தன் ஸ்தூல் உடல் மறைந்த பின்னும் இன்றும் அருள் புரிந்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் பால்குடம் எடுத்து பக்தர்கள் சுவாமிக்கு நேர்த்திக்கடன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவில் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தங்க காக்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி ; புதுச்சேரி அடுத்த வில்லியனூர் புகழ்பெற்ற திருக்காமீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar