அக்.2 காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி மண்டபத்தில் சூரிய ஒளி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2017 11:09
நாகர்கோவில்: அக்., 2 காந்தி ஜெயந்தி தினத்தில் கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் அஸ்திகலசம் வைக்கப்பட்ட இடத்தில் சூரிய ஒளி விழும் நிகழ்ச்சி நடக்கிறது. மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி 1948-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ம் தேதி கன்னியாகுமரி கடலில் கரைக்கப்பட்டது. முன்னதாக கடற்கரையில் அவரது அஸ்தி வைக்கப்பட்டு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் அவரது நினைவாக மண்டபம் கட்டப்பட்டு 1956-ம் ஆண்டு திறக்கப்பட்டது. 79 அடி உயரத்தில் கட்டப் பட்டுள்ள இந்த மண்டபம் அரை ஏக்கர் பரப்பளவில் இந்திய கலாசாரம், பண்பாடு, இறையாண்மையை எடுத்துக்காட்டும் வகையிலும் அகிம்சை, சமாதானம், வாய்மையை உணர்த்தும் வகையிலும் சிறந்த கட்டிட கலையுடன் கட்டப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி அன்று மதியம் 12:00 மணிக்கு அவரது அஸ்தி கலசம் வைக்கப்பட்ட இடத்தில் சூரிய ஒளி விழும் வகையில் இந்த மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் அக்.2ம் தேதி மதியம் 12.00 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதை காண நாடு முழுவதும் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர். ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.