பதிவு செய்த நாள்
09
அக்
2017
12:10
ஊட்டி : ஊட்டியில் உள்ள பழமையான சி.எஸ்.ஐ., துாய தாமஸ் தேவாலயத்தின், 150வது ஆண்டு விழா, நேற்று கொண்டாடப்பட்டது. நீலகிரியில், ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டு, இன்றும் பழமையின் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கும் கட்டடங்களில், ஊட்டி மத்திய பஸ் ஸ்டேண்ட் அருகேயுள்ள, சி.எஸ்.ஐ., துாய தாமஸ் தேவாலயம் முக்கியமானது. கடந்த, 1867, மே முதல் தேதி, அடிக்கல் நாட்டப்பட்ட இத்தேவாலயம், 1870ல் கட்டி முடிக்கப் பட்டது. அன்றைய தினம், கோல்கட்டாவில் உள்ள மெட்ரோ பாலிடன் பேராயர் இத்தேவாலயத்தை பிரதிஷ்டை செய்தார். கடந்த, 1888 முதல், இங்கு, தமிழ் மொழியில் பிரார்த்தனை, வழிபாடு துவக்கப்பட்டது. ஜி.யு., போப், இந்த ஆலயத்தில் பணியாற்றியுள்ளார். பேராலய வளாகத்தில், கல்லறை தோட்டம் உள்ளது. இதில், சென்னை மாகாண கவர்னராக இருந்த வில்லியம் பாட்ரிக், சுவாமி விவேகானந்தரிடம் ஸ்டேனோகிராப்பராக பணிபுரிந்த ஜோசியா குட்வின் ஆகியோர் புதைக்கப்பட்டுள்ளனர். தற்போது, இத்தேவாலயம், தென்னிந்திய திருச்சபை கோவை மண்டலத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தின், 150வது ஆண்டு விழா, நேற்று கொண்டாடப்பட்டது. சி.எஸ்.ஐ., கோவை மண்டல பேராயர் திமோத்தி ரவீந்திர் தலைமையில், சிறப்பு ஆராதனை நடந்தது. தலைமை ஆயர் விக்டர் பிரேம்குமார், உதவி ஆயர் ஜெரமியா ஆல்பிரட், தேவாலய செயலர் ஸ்டெல்லா சாம்சன் உட்பட கமிட்டி நிர்வாகிகள் மற்றும் சி.எஸ்.ஐ., போதக சேகரத்திற்குட்பட்ட, எட்டு கிளை சபைகளில் இருந்து சி.எஸ்.ஐ., கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.