பதிவு செய்த நாள்
10
அக்
2017
11:10
உடுமலை : இயற்கை வழிபாடு தொடங்கி உருவ வழிபாடுகள் வரை மனிதர்களுக்கு, இறைசக்தியின் மீது நம்பிக்கை நீடிக்கிறது. இந்த நம்பிக்கைக்கு பல வடிவங்கள் உள்ளன. சிலைகளை அமைப்பது, இயற்கையாக ஏற்பட்ட மாற்றத்தை நம்பவது மற்றொன்றாகும். மடத்துக்குளம் அருகே காரத்தொழுவு - உடுமலை ரோட்டில் தாமரைப்பாடி பிரிவுக்கு மேற்புறம் ரோட்டோரத்தில் அமைந்துள்ள சாமிபாத வழிபாட்டு கோவில் இதற்கு ஒரு உதாரணமாகும். இங்குள்ள பாறையின் மீது பாதத்தின் வடிவம் உள்ளது. இந்தபாதத்தை இறைவனின் கால்தடம் என மக்கள் வழிபடுகின்றனர்.
தரைமட்டத்திற்கு சற்று உயரமான பாறையின் மீது பாதத்தின் வடிவம் உள்ளது. பல இடங்களில் வேண்டுதலுக்காக பாறை மீது அல்லது கோவில் படிகளின் மீது கால் வைத்து அதனை சுற்றி சுத்தியல் மற்றும் வெட்டிரும்பு பயன்படுத்தி செதுக்கி வைப்பார்கள். இது நேர்த்திகடன் முறைகளில் ஒன்றாகும். இதுபாதம்போல தெரியும். ஆனால், இங்கு பாறையின் மீது, புடைப்புசிற்ப அமைப்பில் பாதவடிவம் காணப்படுகிறது. அருகிலுள்ள இன்னொரு பாறையிலும் பாதவடிவம் உள்ளது. இந்த தரைமட்ட பாறைகளுக்கு அருகில் வேப்பமரம் உள்ளது. பாறை மற்றும் மரத்திற்கு சுற்றுசுவர் அமைத்துள்ளனர். இதை பாதகோவில் என அழைக்கின்றனர். வெள்ளி, செவ்வாய்கிழமைகளில், சிறப்பு வழிபாடு நடக்கிறது. செம்பருத்தி பூக்களால் அலங்காரம் செய்கின்றனர்.அப்பகுதி மக்கள் கூறுகையில், முருகபெருமான் கோபம் கொண்டு வடதிசையிலிருந்து பழனிக்கு சென்றதாக புராணம் உள்ளது. அப்படி அவர் வந்தபோது, இந்த பாறையின் மீது நின்று சென்றதாகவும், அதனால் பாறையின் மீது பாதவடிவம் ஏற்பட்டதாகவும் நம்பிக்கை உள்ளது. இதனால், இதை முருகனின் பாதமாக நினைத்து வழிபடுகிறோம். கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த இடம் பாறைகளால் சூழ்ந்திருந்தது. அப்போது கோவில் கட்டப்படவில்லை. இங்குள்ள காட்டு பகுதியில் ஒரு முதியவர் ஆடு மேய்த்துவிட்டு, பாதவடிவமுள்ள பாறைக்கு அருகில் மரநிழலில் படுத்துறங்கிய போது இறைவன் கனவில் வந்து இங்கு வழிபட சொன்னதாகவும், அப்போதிருந்து இங்கு வழிபாடு தொடங்கியதாகவும் செவிவழி தகவல்கள் உள்ளன. பாதத்துக்கு எண்ணெய் பூசி சந்தன பொட்டு வைத்தும், பாறைமீது எலுமிச்சம்பழம் வைத்தும் வழிபடுவது இந்தகோவில் சிறப்பாகும். ஓட்டுனர்கள் தேங்காய் உடைத்து வழிபட்டு, பின் வாகனங்களை ஓட்டிசெல்வது வழக்கம், என்றனர்.