பதிவு செய்த நாள்
10
அக்
2017
11:10
பொள்ளாச்சி அடுத்த கோட்டூரில் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது உச்சிமாகாளியம்மன் கோவில். கோவிலில், மூலவரான உச்சிமாகாளியம்மன் வடக்கு திசையில் மயானம் நோக்கி இருப்பது சிறப்பாக கருதப்படுகிறது. அம்மன் நான்கு கைகளில், உடுக்கை, அங்குசம், வேல் மற்றும் குங்குமத்துடன் அருள்பாலிக்கிறார்.1976க்கு முன் அம்மன் முகத்தோற்றம் இல்லாமல் சுயம்பு வடிவாக அருள்பாலித்தார். கோவிலில் சுயம்புக்கு பின் முகத்தோற்றத்துடன் கூடிய உச்சிமாகாளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. உற்சவர்களாக மாகாளியம்மன், வள்ளி தெய்வானையுடன் முருகன் எழுந்தளியுள்ளார். கோவில் வளாகத்தில், வீரனுடன் கூடிய குதிரை சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த சிலை, 1884ல் அமைக்கப்பட்டதாக கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளதால், 250 ஆண்டுகள் பழமையான கோவில் என, வாய்மொழி வரலாறு சொல்கின்றனர் கோவில் அரங்காவலர்கள். கோவில் வளாகத்தில் சிவன், முருகன், நவநாயகர்கள், காலபைரவர் மற்றும் சண்டிகேஷ்வரர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. ஆண்டுதோறும் பங்குனி மாதம் அம்மனுக்கு திருவிழா நடத்தப்படும். கோவிலுக்கு, 25 அடி தேர், 20 அடிக்கு சிவன் தேர்கள் உள்ளன. பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.அம்மனுக்கு காலை, 5:30 மணிக்கு முதல் பூஜையும், 7:00 மணிக்கு அலங்கார தீபாராதனை, மதியம், 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும், 4:30 மணிக்கு நடை திறப்பு, இரவு, 7:30 மணிக்கு ராகால பூஜை நடக்கிறது. அம்மனுக்கு நவராத்திரி அன்று, மஞ்சள், விபூதி மற்றும் சந்தனத்தில் அலங்காரம் செய்யப்படுகிறது. கோவிலில், 2007ல் கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலுக்கு வெள்ளிக்கிழமை மட்டுமின்றி வைகாசி விசாகம், நவராத்திரி, சூரசம்ஹாரம், மார்கழி மற்றும் கார்த்திகை மாதம் வழிபாடுகள் சிறப்பு சேர்க்கிறது.திருமண தடை நீங்க வேண்டி அம்மனை வழிபட்டவர்கள், வரன் அமைந்ததும் கோவிலில் திருமணம் நடத்துவது தொன்றுதொட்டு கடைபிடிக்கப்படுகிறது. குழந்தை பாக்கியம், தொழில் அபிவிருத்திக்கு பக்தர்கள் மனமுருகி அம்மனை வழிபட்டு, வேண்டுதல் நிறைவேறியதும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.