களரி அம்மன் கோயில் ஊரணி பராமரிப்பில்லாததால் வீணாகிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2017 12:10
கீழக்கரை: திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட களரி ஊராட்சியில் உள்ள அம்மன் கோயில் குடிநீர் ஊரணியில் போதிய பராமரிப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட குடிநீர் ஊரணியைகடந்த 2011ல் ஊராட்சி நிர்வாகத்தால் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் துார்வாரப்பட்டும், நான்கு புறமும் கம்பிவேலி மூலம் பாதுகாக்கப்பட்டது. கண்மாயில் இருந்து வெளியேறும் உபரி நீரை வரத்துக்கால்வாய் மூலம் ஊரணியில் சேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கோடையிலும் வற்றாமல், களரி கிராமத்தை சுற்றியுள்ள குக்கிராமங்களுக்கு பெரிதும் குடிநீர் ஆதாரமாக விளங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக போதிய மராமத்து பணிகளை செய்யாமல் விட்டதால், நாணல்கள் செழித்து வளர்ந்துள்ளது. இதனால் மழைகாலங்களில் நீரை தேக்குவதில் பெரும் சிரமம் நீடிக்கிறது. எனவே ஊராட்சி நிர்வாகத்தினர், நாணல் புற்களை அகற்றிடவும், பராமரிப்பு பணிகளை செய்யவும் முன்வரவேண்டும்.