பதிவு செய்த நாள்
24
அக்
2017
11:10
நெகமம்: பல்லடம் ரோடு, வாய்க்கால்மேடு பகுதியில் அமைந்துள்ளது மலையாண்டீஸ்வரர் கோவில். 300 ஆண்டுகள் பழமையான இக்கோவில் கற்களால் கட்டப்பட்டது. ஈஸ்வரன் மட்டுமன்றி, விநாயகர், முருகன், அம்பாள், துர்க்கை, நவகிரகங்கள், பைரவர், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. கோவில், தலை விருட்சமாக அரசமரமும், வேப்பமரமும் ஒருங்கிணைந்து வளர்ந்துள்ளது. சன்னிதானத்தின் இடது பக்கம் தீர்த்தக்கிணறு உள்ளது. கடந்த, 1983ம் ஆண்டு கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. அதன்பின், இதுவரை கும்பாபிேஷகம் நடக்க வில்லை. குழந்தை பேறு இல்லாத தம்பதிகள், குழந்தை வரம் கேட்டு மரத்தொட்டில்களை கோவில் மரத்தில் தொங்க விடுகின்றனர். மனமுருகி வேண்டும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, குழந்தை வரம் அருளும் மாயாண்டீஸ்வரரை நம்பிக்கையுடன் வழிபடுகின்றனர். பொள்ளாச்சி – பல்லடம் ரோட்டில் செல்லும் வாகனங்கள், இரவு முழுவதும் கோவில் முன் நின்று செல்கின்றன. காலை , 6:00 முதல் மாலை , 6:00 மணி வரை பூஜைகள் நடக்கிறது. வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டு, குறைகளை ஆண்டவனிடம் முறையிடுகின்றனர். குறைகள் நிவர்த்தியானதும் அடுத்த வாரமே ஆண்டனுக்கு வஸ்திரம் உடுத்தி, அபிேஷகம் செய்து காணிக்கை செலுத்துகின்றனர். தைப்பூச நாளில், விரதமிருக்கும் பக்தர்கள் இங்கு நடக்கும் அன்னதானத்தில் பங்கேற்று, விரதத்தை முடிக்கின்றனர். சனி பிரதோஷம், சிவராத்திரி, வளர்பிறை, தேய் பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.