பதிவு செய்த நாள்
30
அக்
2017
10:10
பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி, தர்மஸ்தலா ஸ்ரீமஞ்சுநாத சுவாமியை தரிசித்து, பூஜை முடிக்கும் வரை, விரதம் கடைபிடித்தார். மஞ்சுநாதா கோவிலுக்குள் நுழைந்த பின், பிரதமர், வேஷ்டி, சால்வை அணிந்து, சிறப்பு பூஜைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மஞ்சுநாதரை தரிசித்த பின், சுவாமிக்கு எதிர்திசையிலுள்ள அன்னப்பசாமி, பின் பகுதியிலுள்ள மஹா கணபதி கோவிலுக்கும் அவர் சென்றார். கோவில் வளாகத்திலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று, பூஜையில் அவர் கலந்து கொண்டார். பின், 10 நிமிடங்கள், தியானம் செய்தார். தர்மகர்த்தா வீரேந்திர ஹெக்டேவுடன் ஆலோசனை நடத்தினார். மஞ்சுநாதா சுவாமியை தரிசிப்பதற்காக, நேற்று காலை முதலே, பிரதமர் மோடி விரதம் இருந்தார். தரிசனம் முடிந்த பின், பிரசாதம் பெற்றுக் கொண்டார். அதன் பின் சிற்றுண்டி சாப்பிட்டார். தர்மஸ்தலாவில் சுத்துபவுலி என்ற இடத்திலுள்ள அறையில், உணவு வசதி செய்யப்பட்டிருந்தது. தர்மஸ்தலா தர்மாதிகாரி வீரேந்திர ஹெக்டே தம்பதி, அவரது பிள்ளைகள், சகோதரர்கள், பிரதமருக்கு சிற்றுண்டி வழங்கி உபசரித்தனர்.