பதிவு செய்த நாள்
30
அக்
2017
10:10
மாமல்லபுரம் : பூதத்தாழ்வார் அவதார உற்சவம், பிற கோவில்கள் பரிவட்ட மரியாதையுடன், நேற்று நிறைவடைந்தது. மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பூதத்தாழ்வார் அவதார உற்சவம், 20ம் தேதி துவங்கி, நேற்று வரை நடந்தது. அவருக்கு, தினமும் சிறப்பு திருமஞ்சனம், வீதியுலா; நேற்று முன்தினம் திருத்தேர் உற்சவம் நடந்தது.இறுதி நாளான நேற்று, 20 ஆண்டுகளுக்கு பின், அவர் அவதரித்த நந்தவன குள தீர்த்தநீரில், அவருக்கு திருமஞ்சனம் நடந்து, இரண்டாம் திருவந்தாதி பாடப்பட்டது. பெருமாள், தாயார், ஆண்டாள், லட்சுமி நரசிம்மர், ராமர், அவருக்கு பரிவட்ட மரியாதை அளித்தனர். திருமொழி, கைத்தல சேவைகள் நடந்தன.தொடர்ந்து, ஆதிவராக பெருமாள் கோவில் சென்று, அங்கு பரிவட்ட மரியாதை ஏற்ற பின், வீதிஉலா சென்ற பெருமாள், அவதார மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு, பெருமாள், தேவியர், பூதத்தாழ்வார் திருமஞ்சனம், திருப்பாவை சாற்றுமறை நடந்தது.திருவாய்மொழி சாற்று மறை முடிந்து, திருவிடந்தை, காஞ்சிபுரம், திருநீர்மலை, திருவல்லிக்கேணி, திருப்பதி கோவில்கள் சார்பில், ஆழ்வாருக்கு பரிவட்ட மரியாதை அளிக்கப்பட்டது.