பதிவு செய்த நாள்
31
அக்
2017
11:10
தங்கவயல்: பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலில் தெப்பக்குள திறப்பு விழாவை ஒட்டி, ஆகம சாஸ்திர சம்பிரதாயப்படி, பூஜைகள், ஹோமங்கள் நடத்தப்பட்டன.
ராபர்ட்சன்பேட்டை, கீதா சாலையிலுள்ள, பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலில், தெப்பக்குளம் ஜீர்ணோத்தாரன மஹா சம்ப்ரோஷண பூஜை, நேற்று முன்தினம் துவங்கியது. இந்து அறநிலையத்துறையின் ஆகம பண்டிதர்கள், 21 பேர் கலந்து கொண்டனர். யாக பூஜை, வாஸ்து பூஜை, ரக் ஷா பந்தனம், அஷ்டவாதன பூஜை நடத்தினர். 108 கலசங்கள் வைத்து, ஆறு குண்ட ஹோம பூஜை நடத்தப்பட்டது. பிற்பகலில், தெப்பகுளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டது. மாலையில், சுவஸ்தி புண்யாஹவாசன, மிருத்யுகிரஹண, கும்ப அங்குரார்ப்பணம், தீபாராதனை, பஞ்சாக பிராரயணம், கும்பஸ்தாபனம், கும்ப வாஹனம், மஹா நிவேதனம், உக்த ஹோமங்கள், ஹெளத்ரா பிரசாசன விஷ்ணு பாரமூர்த்திக ஹோம, சர்வதாவ ஹோமங்கள், தாதாதி ஹோமம், அஷ்டாக் ஷரி துவாதசாத்ரி ஹோமங்கள், பூர்ணாஹூதி, பஞ்சாதத்ரி அஷ்டவதான சேவை, மஹா மங்களார்த்தி, தீர்த்த பிரசாத வினியோகம் நடைபெற்றது.
முன்னாள் எம்.எல்.ஏ., பக்தவச்சலம், நகராட்சி பா.ஜ., உறுப்பினர் விஜயகுமார், கோவில் உற்சவ கமிட்டியை சேர்ந்த ஆர்.சுரேஷ்குமார், பாபு நாயுடு, சின்னப்பா நாயுடு மற்றும் முதலியார் சங்க நிர்வாகிகள் உள்பட, ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்று காலையில், சுவஸ்தி புண்யாஹ வாசனம், கும்பாராதனை, நிவேதனை, ஹாரதி, நித்யா ஹோமங்கள், விசேஷ ஹோமங்கள், ஸ்பன்ன திருமஞ்சனம், மஹா பூர்ணாஹூதி, மஹா இயந்திரதானம், சம்ம பிரதக் ஷணம், திருஷ்டி நிரிக் ஷணம், கூர்மாண்டசேதனம், கதலி விருக்ஷ சேதனம், பலிஹரண பஞ்சார்த்தி, அஷ்டாவாதனம், மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாத வினியோகம் நடைபெற்றது. தெப்பக்குளத்துக்கு பூஜை செய்யப்பட்டது. புனிதநீரை எடுத்து வந்து யாக சாலை அருகே வைத்திருந்த பெருமாள் விக்ரஹத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தெப்பக்குளத்தில் நிழற் கண்ணாடி நிறுத்தி, குளத்திற்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. ஜல தீர்த்த பூஜை செய்து, பூசணிக்காயில் கற்பூரம் ஏற்றி, கோவிலை சுற்றி வந்து திருஷ்டி பரிகாரம் செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட தேரில், பெருமாள் நகர்வலம் வந்தார். பக்தர்கள் பயன்பாட்டுக்கு தெப்பக்குளம் திறக்கப்பட்டது. பக்தர்கள் துாய்மையை கடைபிடிக்குமாறு, கோவிலின் தலைமை பூசாரி ஹரிநாத் ஆச்சார் கேட்டுக்கொண்டார்.