பதிவு செய்த நாள்
31
அக்
2017
12:10
திருவண்ணாமலை: ’திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு, மூன்று நாட்கள் சிறப்பு ரயில் இயக்க வேண்டும்’ என, தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு, கலெக்டர் கந்தசாமி கடிதம் அனுப்பி உள்ளார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா, நவ., 23ல் கொடியேற்றத்துடன் துவங்கி, 10 நாட்கள் நடக்கிறது. டிச., 2ல், அதிகாலை, 4:00 மணிக்கு, பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில், மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளன.இதைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்தும், 20 லட்சம் பக்தர்கள் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. ’பக்தர்கள் வசதிக்காக, டிச., 1 முதல், 3 வரை, தொடர்ந்து, மூன்று நாட்களுக்கு, சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்’ என, தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு, திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ’காட்பாடி - விழுப்புரம் வழியாக சென்னைக்கும், திருவண்ணாமலை - புதுச்சேரி, நெல்லை, மதுரை ஆகிய தென் மாவட்டங்களுக்கும் நேரடி ரயில்களை இயக்க வேண்டும்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.