பதிவு செய்த நாள்
31
அக்
2017
11:10
மைசூரு: மைசூரின் பொது இடத்தில், 10 அடி உயரமுள்ள, 15 டன் எடை கொண்ட ராமகிருஷ்ண பரமஹம்சர் சிலை நிறுவப்பட்டுள்ளது. மைசூரு நகர அபிவிருத்தி ஆணையம் உருவாக்கியுள்ள, ராமகிருஷ்ண நகர் சர்க்கிளில், ராமகிருஷ்ண பரமஹம்சர் சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது.
சிலைக்கு, 45 லட்சம் ரூபாயும், சர்க்கிள் உருவாக்க, 3.55 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. சிலைக்காக, ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, 30 டன் எடை கொண்ட பளிங்கு கல் கொண்டு வரப்பட்டது. சிலையை வடிவமைக்கும் பொறுப்பு, அருண் யோகிராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. தொனசிகொப்பாலில் உள்ள காஷ்யப்ப பிரம்ம சில்பகலா பள்ளி வளாகத்தில், யோகிராஜுடன், செலுவராஜ், சித்தராஜு, சோமண்ணா, சந்துரு, ஜெகதீஷ், நாகராஜ், சிவசங்கர், மரியசுவாமி ஆகியோர் ஒன்பது மாதங்கள் இரவு, பகலாக உழைத்து, 15 டன்னில், 10 அடி உயரத்திலான ராமகிருஷ்ண பரமஹம்சர் சிலையை வடிவமைத்தனர். ராமகிருஷ்ண நகர் சர்க்கிளில், இரண்டு அடி உயரம், பத்து அடி அகலத்தில், தாமரை பீடத்தை, சிற்பி யோகிராஜ், வடிவமைத்திருந்தார். இப்பீடத்தில், தியான நிலையில், ராமகிருஷ்ண பரமஹம்சர் உருவ சிலை நிறுவப்பட்டது. நாட்டிலேயே, பொது இடத்தில் பரமஹம்சர் உருவ சிலை நிறுவப்பட்டது, இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வருடன் ஆலோசித்த பின் திறப்பு விழா தேதி விரைவில் முடிவு செய்யப்படுமென, மைசூரு நகர அபிவிருத்தி ஆணைய தலைவர் துருவகுமார் தெரிவித்தார்.