சபரிமலை: சபரிமலையில் முதல்வர்அடிக்கல் நாட்டிய, பக்தர்கள் காத்திருப்பு அறை கட்டுமானம் உள்ளிட்ட பணிகளுக்கு வனத்துறையால் இடையூறு ஏற்பட்டுள்ளது.சபரிமலை சன்னிதானத்தில் சுற்றுலாத்துறை சார்பில் 4.91 கோடி ரூபாய் செலவில் புண்ணிய தர்ஷனம் என்ற பக்தர்கள் காத்திருப்பு அறை கட்டப்படுகிறது. இதற்கு கடந்த 17-ம் தேதி முதல்வர் பினராயி விஜயன், சன்னிதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் வனத்துறை அமைச்சர் ராஜூ, தேவசம்போர்டு அமைச்சர்கடகம்பள்ளி சுரேந்திரனுக்கு அனுப்பிய கடிதத்தில், முதல்வர் அடிக்கல் நாட்டிய திட்டத்துக்கான இடம் பற்றிய விபரம், வனத்துறைக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும், அந்த இடம் தேவசம்போர்டுக்கு சொந்தமானதா? வனத்துறைக்கு சொந்தமானதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.மேலும் சன்னிதானம் பெரிய நடைப்பந்தலின் பின்புறம் வழியாக டிராக்டர் செல்ல அனுமதிக்க முடியாது என்றும் அது பெரியாறு புலிகள் சரணாலய பகுதியில் வருவதாகவும், பம்பையில் இதுவரை இளநீர் விற்பனை நடைபெற்ற இடம் யானைத்தரை என்றும் அதில் இந்த ஆண்டு அனுமதிக்க முடியாது என்றும் அங்கிருந்து 20 மீட்டருக்கு அப்பால் இளநீர் விற்பனை செய்யலாம் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது. வனத்துறையின் இந்த நடவடிக்கைகள் சபரிமலையில் வளர்ச்சிப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாக கருதப்படுகிறது.