திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி., ரோடு தெப்பக்குளத்தை தூய்மைப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. இங்கு தைமாதம் தெப்பத்திருவிழா நடக்கும். குளத்தில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க கரையில் போர்வெல் அமைக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளாக மழையின்றி போர்வெல்லிலும் தண்ணீர் குறைந்தது. குளத்தினுள் தெப்பம் சுற்றிவர போதுமான தண்ணீர் நிரப்ப முடியாததால், 2015ல் ஒரு சுற்றுமட்டும் தெப்பம் வலம் வந்தது.
கடந்தாண்டு நிலை தெப்பமாக நிறுத்தப்பட்டு திருவிழா நடந்தது. சமீபத்தில் பெய்த மழையால் தெப்பக்குளத்திற்கு சிறிதளவு தண்ணீர் வந்தபோதிலும் பாசி படர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட் டது. கோயில் துணை கமிஷனர் கவிதா பிரியதர்ஷினி உத்தரவுபடி, பாசிகள் அகற்றும் பணி நடக்கிறது.
தொடர்ந்து மழை பெய்தாலோ, தென்கால் கண்மாய்க்கு அணை தண்ணீர் வந்தாலோ போர்வெல்லில் தண்ணீர் நிரம்பும். அதன்மூலம் இந்த ஆண்டு தெப்பம் சுற்றிவர போதுமான தண்ணீர் கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.