பதிவு செய்த நாள்
04
நவ
2017
12:11
திருவண்ணாமலை: தீப திருவிழாவில், அன்னதானம் வழங்க, சில கட்டுப்பாடுகளை விதிக்க, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
திருவண்ணாமலையில், தீப திருவிழா வரும், 23ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிச., 2ல் அதிகாலை கோவில் கருவறை எதிரில் பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை காண, பல்வேறு பகுதிகளில் இருந்து, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்வர். பக்தர்களுக்கு வசதியாக, கிரிவலப்பாதையை தூய்மையாக வைத்திருக்க, அன்னதானம் வழங்க உள்ளவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளது. இதில், கிரிவலப் பாதையில் உணவு சமைக்கக் கூடாது, எளிதில் தீப்பற்றக் கூடிய காஸ் சிலிண்டர்கள், விறகு அடுப்புகள், மண்ணெண்ணெய் அடுப்புகள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.
அன்னதானத்திற்கு பயன்படுத்தப்படும் உணவு பொருட்கள் தரமானதாகவும், தூய்மையா னதாகவும் இருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது, வாழை இலை, தொன்னை, பாக்கு மட்டையில் அன்னதானம் வழங்க வேண்டும். பாக்கெட் குடிநீர் வினியோகிக்க கூடாது, அன்னதானம் முடிந்தவுடன், இடத்தை தூய்மை படுத்த வேண்டும் என, கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளது.