பதிவு செய்த நாள்
08
நவ
2017
11:11
தமிழக அரசின், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்கம் மற்றும் வைர நகைகள், பழங்கால ஐம்பொன், மரகத சிலைகள், போதிய பாதுகாப்பு இன்றி உள்ளன. இதனால், சர்வதேச சிலை கடத்தல் கும்பல், பழங்கால சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு கடத்தி வருகிறது; அவர்களை, போலீசாரும் கைது செய்து வருகின்றனர். மேலும், தமிழகத்தில் சிலை கடத்தலை தடுக்க, ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள், 20 அம்ச செயல்திட்ட ஆலோசனைகளை,அற நிலையத் துறை யினருக்கு அளித்து உள்ளனர். அதாவது,
* கோவில்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் தரமானதாக இல்லை; திருடர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் உள்ளது. தற்போது, குறைந்த விலைக்கு தரமான கேமராக்கள் கிடைக்கின்றன; அவற்றை வாங்கி பொருத்த வேண்டும்
* கோவில் சாவி பராமரிப்பு, இரவு காவலாளி நியமனம், கதவில் அபாய ஒலி எழுப்பும் கருவி பொருத்துதல், அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய பதுகாப்பு பெட்டகம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, பல ஆலோசனைகள் இருந்தன. ஆனால், அறநிலையத்துறை, அவற்றை செயல்படுத்த வில்லை. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், போலீசாரின் ஆலோசனைகளை நிறைவேற்ற போதிய நிதி இல்லை என, அறநிலையத்துறை பதில் அளித்துள்ளது. இதற்கு, நீதிபதி மகாதேவன் கண்டனம் தெரிவித்ததுடன்,போலீ சாரின் ஆலோசனைகளை செயல்படுத்த வேண்டும். இது தொடர்பாக, இரு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும்; தவறினால், அறநிலையத்துறை கமிஷனர் நேரில் ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார். இது, அறநிலையத்துறை அதிகாரிகளிடம், கிலியை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், அறநிலையத்துறை இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும் என்றனர். - நமது நிருபர் -