பதிவு செய்த நாள்
12
டிச
2011
12:12
சுசீந்திரம் : சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் ஆஞ்சனேயர் ஜெயந்தி விழா,வரும் 24ம் தேதி நடக்கிறது. சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் ஆஞ்சனேய சுவாமி 18 அடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்தில் காட்சி தருகிறார். இவருக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர். இவர்கள் வழங்கிய வெள்ளி அங்கி, தங்க அங்கி, தங்க மாலைகள்,கதை உட்பட பல பொருட்கள் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப் பட்டவையாகும்.தனது எதிரிலுள்ள தம்பதி சமேதராக காட்சி தரும் சீதாராமனை கைகூப்பி தொழும் தோற்றத்தில் காட்சி தரும் ஆஞ்சனேய சுவாமி,வேண்டிய வரம் தரும் அற்புதமான சக்தி உடையவராகவும் பக்தர்களால் கருதப் படுகிறார்.ராமாயண யுகத்தில் பல அற்புதங்களைச் செய்தவரும், தொண்டனுக்கு எடுத்துக் காட்டாக திகழ்வருமான ஆஞ்சனேய சுவாமியின் ஜெயந்தி விழா,வரும் 23ம் தேதி துவங்குகிறது.முதல் நாள் விழாவில் காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் , 8மணிக்கு நீலகண்ட வினாயகருக்கு அபிஷேகம்,10.30 மணிக்கு தாணுமாலய சுவாமிக்கு அபிஷேகம்,11.30 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட வினாயகருக்கு தீபாராதனை, 7.30மணிக்கு காலபைரவனுக்கு தீபாராதனை நடக்கிறது.இரண்டாம் நாள் காலை 4 மணிக்கு ராமபிரானுக்கு அபிஷேகம்,காலை 10முதல் 8மணி வரை அன்னதானம்,பகல் 11 மணிக்கு ஆஞ்சநேய சுவாமிக்கு அலங்கார தீபாராதனை,மாலை 5மணிக்கு ஸ்ரீராம ஆஞ்சனேயர் பக்தர்கள் குழுவினரின் பஜனை ,6க்கு ஸ்ரீராம பிரானுக்கு புஷ்பாபிஷேகம், 6.30க்கு ஆஞ்சனேய சுவாமிக்கு புஷ்பாபிஷேகம்,இரவு 10க்கு சுவாமிக்கு அலங்கார தீபாராதனை ஆகியவை நடக்கின்றன.விழா ஏற்பாடுகளை ஸ்ரீராம ஆஞ்சனேய பக்தர்கள் டிரஸ்ட் மற்றும் தெவசம் போர்டு இணை ஆணையர் ஞானசேகர்,கோயில் மேலாளர் ஸ்ரீமூல வெங்கடேசன் ஆகியோர் செய்து வருகின்றனர்.