பதிவு செய்த நாள்
13
நவ
2017
11:11
குன்னுார் : குன்னுார் - ஊட்டி சாலையில் எல்லநள்ளியில் உள்ள சாய் கைலாஷ் கோவிலில், 24 மணி நேர அகண்ட நாம பஜனை நடந்தது. புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபாவின், 92வது பிறந்தநாள் விழா வரும், 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி, 120 நாடுகளில் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு துவங்கி, நேற்று மாலை, 6:00 மணிவரையில் தொடர் அகண்ட நாம பஜனை நடந்தது.உலக நன்மைக்காக நடத்தப்பட்ட இந்த அகண்ட நாம பஜனை, குன்னுார் - ஊட்டி சாலையில், எல்லநள்ளியில் உள்ள சாய் கைலாஷ் கோவிலிலும் நடத்தப்பட்டது. நீலகிரி மாவட்ட ஸ்ரீ சத்ய சாய்சேவா சமிதிகளின் சார்பில், மாவட்ட தலைவர் டாக்டர் ராமு தலைமையில், நடத்தப்பட்ட இந்த பஜனையில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி மட்டுமின்றி பல்வேறு கிராமப்பகுதிகளில் உள்ள சமிதியினர் திரளாக பங்கேற்று பஜனையில் ஈடுபட்டனர். இதில் சத்யசாய்பாபாவின் பஜனைகள் பக்தி பரவசத்துடன் பாடப்பட்டன.சமிதி நிர்வாகிகள் கூறுகையில், இறை சிந்தனை அனைவரிடமும் அதிகரிக்கவும், உலக நன்மைக்காகவும் இந்த தொடர் பஜனை நடத்தப்பட்டது என்றனர்.ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பிறந்தநாள் விழாவின் அடுத்த நிகழ்ச்சியாக கோவிலில் வரும், 19ம் தேதி காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை பாடகர் ஹரிஹரன் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தொடர்ந்து, வரும், 23ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றனர்.