பதிவு செய்த நாள்
13
நவ
2017
01:11
திருவண்ணாமலை: ’திருவண்ணாமலையில், கார்த்திகை தீப திருவிழாவிற்குள், கிரிவலப்பாதை விரிவாக்க பணியை முடிக்க வேண்டும்’ என, கலெக்டர் கந்தசாமி உததரவிட்டார். திருவண்ணாமலை கிரிவலப்பாதை விரிவாக்கப்பணி, 65 கோடி ரூபாய் மதிப்பில், கடந்த, இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது. பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பாதையின் வலதுபுறம், இரண்டு மீட்டர், இடதுபுறத்தில், ஐந்து மீட்டர் தொலை விரிவுபடுத்தப்படுகிறது. பணியின்போது, மரங்களை அகற்றக்கூடாது; பக்தர்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கிரிவலப்பாதை விரிவாக்கப்பணிக்காக, சாலையின், இருபுறமும் தோண்டப்பட்டுள்ள பள்ளங்கள் மற்றும் சிதறி கிடக்கும் கற்களால், பக்தர்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியத்தால், முறையாக பணிகள் நடக்கவில்லை என, கலெக்டர் கந்தசாமிக்கு புகார் வந்தது. இதையடுத்து, கிரிவலப்பாதை விரிவாக்கப்பணியை, நேற்று முன்தினம் அவர் ஆய்வு செய்தார். அப்போது, விரிவுபடுத்தப்படும் நடைபாதையில், டைல்ஸ் கற்கள் பதிக்கும் பணியை அவர் பார்வையிட்டார். மழை நீர் நிலத்தடிக்கு செல்லும் வகையில் சிறு இடைவெளியில் டைல்ஸ் பதிக்க வேண்டும், பக்தர்கள் நடந்து செல்லும் போது தடுமாற்றம் ஏற்படாத வகையில், மேடு பள்ளமின்றி சமதளத்தில் டைல்ஸ் கற்களை பதிக்க வேண்டும், தீப திருவிழாவிற்குள் பணியை முடிக்க வேண்டும் என, பணியாளர்களுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.