பதிவு செய்த நாள்
16
நவ
2017
10:11
பாலக்காடு: குருவாயூர் கோவிலில், செம்பை சங்கீத உற்சவம் நேற்று துவங்கியது. கேரளா, குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், கார்த்திகை ஏகாதசி திருவிழாவையொட்டி, ஆண்டுதோறும் செம்பை சங்கீத உற்சவம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா, கோவில் வளாகத்தில் உள்ள மேல்பத்துார் கலையரங்கில் நேற்று மாலை துவங்கியது.
கேரள அறநிலையத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் விழாவை துவக்கி வைத்தார். இசைக் கலைஞர் கிருஷ்ணனுக்கு செம்பை நினைவு விருது வழங்கப்பட்டது.வரும், 30 வரை நடக்கும் சங்கீத உற்சவத்தில், 3,000த்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கின்றனர். முன்னதாக, செம்பை வைத்தியநாத பாகவதர் பயன்படுத்திய தம்புரா, குருவாயூர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பாலக்காடு செம்பை நினைவு சங்கீத கல்லுாரி, பூழிக்குன்னம் மகாவிஷ்ணு கோவில், கலாமண்டலம், குருவாயூர் மம்மியூர் கோவில் ஆகியவற்றில் தம்புரா வந்த வாகனத்துக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தம்புராவை பெற்றுக்கொண்ட கோவில் நிர்வாகிகள், உற்சவ விழா மேடையில் பிரதிஷ்டை செய்தனர். செம்பை வித்யாபீட துணைத்தலைவர் செம்பை சுரேஷ், செயலர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.