பதிவு செய்த நாள்
16
நவ
2017
11:11
வேலூர்: திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு, வேலூர் ஆவினில் இருந்து, மூன்றரை டன் நெய் வினியோகம் செய்யப்பட உள்ளது. திருவண்ணாமலையில், கார்த்திகை தீப திருவிழா டிச., 2 ல் நடக்கிறது. அன்று அண்ணாமலையார் மலை உச்சியில் உள்ள கொப்பரையில், மஹா தீபம் ஏற்றப்படும். தீபம் ஏற்றுவதற்காக, பக்தர்கள் முன் கூட்டியே கோவில் அலுவலகத்தில், நெய் காணிக்கை பணத்தை செலுத்தி விடுவர். கடந்தாண்டு, தீபம் ஏற்றுவதற்கான நெய், வேலூர் ஆவின் நிறுவனத்தில் இருந்து வினியோகம் செய்யப்பட்டது. இந்தாண்டும், வேலூர் ஆவின் நிறுவனத்தில் இருந்து, மூன்றரை டன் நெய் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து, வேலூர், திருவண்ணாமலை மாவட்ட ஆவின் பொது மேலாளர் கோதண்டராமன் கூறியதாவது: திருவண்ணாமலை, கார்த்திகை தீப திருவிழாவில், மஹா தீபம் ஏற்ற, கடந்தாண்டு, மூன்றரை டன் நெய், ஒரு கிலோ, 398 ரூபாய், 96 காசு விலையில் வினியோகம் செய்யப்பட்டது. இந்தாண்டும், ஆவினுக்கு ஆர்டர் கிடைத்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ நெய், 430 ரூபாய், 32 காசு வீதம், மூன்றரை டன் நெய் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதற்காக, நெய் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. 15 லிட்டர் டின்களில் நெய் அடைக்கப்பட்டு, வரும், 18 ல், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், தீப விழாவையொட்டி, திருவண்ணாமலை நகரில், 15 இடங்களில் ஆவின் சிறப்பு பாலகம் அமைக்கப்படும். வரும், 20 முதல் இந்த பாலகம், 24 மணி நேரம் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.