பதிவு செய்த நாள்
18
நவ
2017
01:11
ஆர்.கே.பேட்டை : வெள்ளாத்துாரம்மன் கோவிலில் அமாவாசையை ஒட்டி, இன்று மாலை, ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த, வெள்ளாத்துார் கிராமத்தில் உள்ள வெள்ளாத்துாரம்மன் கோவிலில், அமாவாசை ஊஞ்சல் உற்சவம், முதல் முறையாக, இன்று நடத்தப்படுகிறது.வெள்ளாத்துாரம்மனை குலதெய்வமாக வணங்கும் பக்தர்கள், ஆடி மற்றும் தை மாதத்தில், பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர். வெள்ளாத்துார் மரபினரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த கோவில் நிர்வாகத்தை, சில மாதங்களுக்கு முன், இந்து சமய அறநிலைய துறை கைப்பற்றியது. அதன் பின், கோவிலில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. தற்போது, புதிதாக, ஊஞ்சல் உற்சவம் துவங்கப்படுகிறது. ஆண்டின், ஒவ்வொரு மாதமும் நடைபெற உள்ள, அமாவாசை உற்சவத்திற்கு, பக்தர்கள் உபயதாரர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இன்று மாலை, 5:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் புதிய ஊஞ்சலில், உற்சவர் அம்மன் எழுந்தருளுகிறார். முன்னதாக, கலச பூஜையும், சிறப்பு வேள்வியும் நடத்தப்படுகிறது.ஊஞ்சல் உற்சவத்திற்கு பின், அம்மன் உள் புறப்பாடு எழுந்தருளுகிறார். வெளியூர்களில் இருந்து வருகை தரும் பக்தர்களுக்கு, இரவு உணவு, தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகளை, கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.