பதிவு செய்த நாள்
27
நவ
2017
12:11
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், திருவாசக முற்றோதல், நேற்று கோலாகலமாக நடந்தது. தொண்டை மண்டலத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக வும், சமய குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற தலமாகவும், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் விளங்குகிறது. இங்கு, மாதந்தோறும் திருவண்ணாமலையை போல், பவுர்ணமி கிரிவலத்துடன், திருவாசக முற்றோதலும் சிறப்பாக நடைபெறும். நேற்று, இந்நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலத்தைச் சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்று, திருப்பதிகங்களான திருக்கழுமலம், திருவையாறு, திருமுதுகுன்றம், திருவிழிமிழலை உள்ளிட்ட திருப்பதிகங்களையும் பாடி வழிபட்டனர்.
திருக்கழுக்குன்றம் சிவசித்தர் தாமோதரன் தலைமையில் நடந்தது. கோவில் நுழைவாயிலில், வாழை மற்றும் மங்கலத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. திருவாசக புத்தகங்களும், நாயன்மார் புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. முன்னதாக, தேசுமுகிப்பேட்டை கிரிவலப் பாதையிலிருந்து ஊர்வலமாக சிவனடியார்கள் வந்த போது, நால்வர் கோவில் பகுதியில், அப்பர் தொண்டரணியினர் வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து, மலையடிவாரம் சென்று விழாவை துவக்கினர். பக்தர்கள் அனைவருக்கும், தங்கும் வசதி மற்றும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.