பதிவு செய்த நாள்
27
நவ
2017
12:11
கம்பம்:சபரிமலை செல்லும் பக்தர்களின் வாகனங்களை ஒழுங்குபடுத்தவும், காலை, மாலை நேரங்களில் நெடுஞ்சாலைகளில் ரோந்துப் பணியில் கண்காணிப்பது அவசியம் என்றும் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தேனி எஸ்.பி., பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் போலீசாருக்கு வழங்கியுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தென் மாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பெரும்பாலோர் தேனி, கம்பம், குமுளி வழியாகவே செல்கின்றனர். செங்கோட்டை, பாலக்காடு, நாகர்கோவில் உள்ளிட்ட பல பாதைகள் இருந்தபோதும், பெரும்பாலான பக்தர்கள் குமுளி பாதையையே தேர்வு செய்து சபரிமலை செல்கின்றனர்.
தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களுக்கு ஐயப்பன் கோயில் நடை திறப்பதால், அந்த நாட்களிலும், சித்திரை மாதமும் அதிகபக்தர்கள் சபரிமலை செல்கின்றனர். இருந்த போதும் கார்த்திகை மாதம் முதல் தேதி மாலை அணிந்து விரதமிருந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்த ஆண்டு கார்த்திகை முதல் நாளே ஆயிரக்கணக்கில் வாகனங்கள் சென்றன. குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களின் பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் அதிகம் செல்கின்றன. வாகன நெரிசலை சரிபண்ண கடந்த சில ஆண்டுகளாக குமுளி மலைப்பாதையை ஒருவழிப்பாதையாக அறிவித்து செயல்படுத்தி வந்தது. இன்னும் சில வாரங்களில் ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் இப்போது இருந்தே தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றும் எஸ்.ஐ., மற்றும் போலீசார் காலை, மாலை என இருவேளைகளிலும் ஸ்டேஷன்களில் இருக்கக் கூடாது.
மாறாக நெடுஞ்சாலைகளில் சபரிமலை செல்லும் பக்தர்களின் வாகனங்களை கண்காணிக்க வேண்டும். எந்தவித பிரசனையும் இன்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக நெடுந்தொலைவில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி ஆசுவாசப்படுத்தி செல்ல வலியுறுத்த வேண்டும்.போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்தும், அதிக வேகத்துடன் வாகனங்களை இயக்க கூடாது என்றும் பக்தர்கள் மற்றம் பக்தர்கள் செல்லும் வாகனங்களின் டிரைவர்களிடம் அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக விபத்தில்லாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.