பதிவு செய்த நாள்
28
நவ
2017
11:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைமேல் டிச., 2ல் கார்த்திகை மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் தீப கொப்பரை தயார் நிலையில் உள்ளது.சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் மலை மீதுள்ள உச்சி பிள்ளையார் கோயில் மண்டபம் அருகே கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. அதற்காக நான்கரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரை, 300 கிலோ நெய், 150 மீட்டர் காடா துணி திரி, ஐந்து கிலோ சூடம் பயன்படுத்தப்படும். காடா துணியால் திரி தயாரித்து, அதை நெய்யில் ஒரு நாள் வைக்கப்படும். திரி தயாரிக்க திருவண்ணாமலையிலிருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மூன்று நாட்கள் தீபம் எரியும். தீபம் ஏற்றப்படும் கொப்பரை தற்போது கோயில் கம்பத்தடி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை(நவ.,29) சைவசமய ஸ்தாபித வரலாற்று லீலையில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், நவ.,30ல் கங்காளநாதர் சுவாமி, நடராஜமூர்த்தி, சிவகாமி அம்பாள், காமதேனு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடு நடக்கிறது. டிச.,1ல் சுவாமிக்கு பட்டாபிஷேகம், டிச.,2 காலை 10:45 மணிக்கு சிறிய வைர தேரோட்டம், மாலை 6:00 மணிக்கு மலைமேல் மகா தீபம், 16 கால் மண்டபம் அருகே சொக்கப்பான் தீப காட்சியும் நடக்கிறது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக டிச.,3ல் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.