பதிவு செய்த நாள்
29
நவ
2017
11:11
அனுப்பர்பாளையம்:“கடவுளை முழுமையாக நம்பினால், கைவிட மாட் டார்,” என்று, நெல்லை கண்ணன் பேசினார்.திருப்பூர் சைவ சித்தாந்த சபை மற்றும் ஓம் பசுமை அங்காடி இணைந்து நடத்திய ஆன்மிக சொற்பொழிவு, திருமுருகன்பூண்டி மாணிக்க வாசகர் தமிழ் அரங்கில் நடந்தது. சைவ சித்தாந்த சபை தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். துணை தலைவர் உமாசங்கர் முன்னிலை வகித்தார்.‘அறம் எனப்படுவது எது?’ என்ற தலைப்பில், நெல்லை கண்ணன் பேசியதாவது:மனதை எவன் சுத்தமாக வைத்திருக்கிறானோ, அதுவே அறம். செய்யும் வேலையை, விரும்பி செய்ய வேண்டும்; கடமைக்கு செய்யக்கூடாது. அன்பு வேறு சிவன் வேறு என்றில்லை; அன்பாக இருந்தால், சிவ பெருமானே உங்களிடம் உள்ளதாக அர்த்தம்.
தெய்வத்தை நம்பி போனால் நம்முடன் வரும்; அன்பு செய்தாலே, அறம் செய்ததற்கு சமம். நம்பிக்கையுடன் எந்த தொழில் செய்தாலும், கடவுள் உடன் இருப்பார். காசிக்கு போனால் எதையாவது விட்டு வர வேண்டும் என்பார்கள். அதாவது, நம்மிடம் உள்ள பொருளை விட வேண்டும் என்பதல்ல; கெட்ட எண்ணத்தை விட வேண்டும் என்று அர்த்தம். கடவுள் குடியிருக்க, மனதை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். ஆற்றோரத்தில் ஒரு சாமியார் இருந்தார். அவரது ஆசிரமத்துக்கு பால் கொண்ட வந்த சிறுமி, ‘சுவாமி... ஆற்றில் தண்ணீர் அதிமாக செல்கிறது. எப்படி போவது,’ என்று கேட்கிறாள். அதற்கு சாமியாரோ, ‘ஓம் நமசிவாய’என்ற மந்திரத்தை கூறியவாறே செல்,’ என்றார். சிறுமியும், மந்திரத்தை கூறி, ஆற்றின் தண்ணீர் மேல் நடந்து சென்றார். இதை பார்த்த சாமியாருக்கு, ஆச்சரியம். உடனே, அவரும் ‘ஓம் நமசிவாய’ என்று கூறியபடி நடந்து சென்றார். ஆனால், அவரால் மறு கரைக்கு செல்ல முடியவில்லை. சிறுமி, கடவுளை முழமையாக நம்பினார். சாமியாரோ, கடவுளை நம்பாமல், தண்ணீரில் நனைந்து விடும் என்று, தனது உடமையை மடித்து கட்டினார். அதனால், கடவுள் அவரை கைவிட்டார். எனவே, ஒரு செயலை செய்யும்போது, கடவுளை முழுமையாக நம்ப வேண்டும்.இவ்வாறு, நெல்லை கண்ணன் பேசினார்.