சபரிமலையில் ஒரு மணி நேரத்தில் 8 லட்சம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பு : பக்தர்கள் தாகம் தீர்க்க ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2017 01:12
சபரிமலை: சபரிமலையில், ஒரு மணி நேரத்தில் சுமார் 8 லட்சம் லிட்டர் தண்ணீரை சுத்திகரித்து குடிநீராக வழங்க கேரள குடிநீர் வழங்கல் துறை செய்துள்ளது. கேரள ஐகோர்ட் உத்தரவு படி சபரிமலையில் பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. இது சபரிமலையில் பிளாஸ்டிக் குவிவதை குறைத்துள்ளது. இதனால் பக்தர்களுக்கு கேரள அரசின் குடிநீர் வழங்கல் துறையும், தேவசம்போர்டும் இணைந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கி வருகிறது.குடிநீர் வழங்கல் துறை சார்பில் பம்பை, சரங்குத்தி, மரக்கூட்டம், ஹில்டாப், பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் சுத்திகரிப்பு பிளான்ட் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.ஒரு மணி நேரத்தில் இந்த பிளான்டுகளில் சுமார் 8 லட்சம் லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு, 250-க்கும் மேற்பட்ட குழாய்கள் மூலம் வழங்கப்படுகிறது. சில இடங்களில் சுடுநீரும் வழங்கப்படுகிறது.நிலக்கல் வாகன நிறுத்துமிடத்தில், ஆயிரம் லிட்டர் வீதம் மூன்று பிளான்டுகள் அமைக்கப்பட்டு 20 குழாய்களில் குடிநீர் வழங்கப்படுகிறது. இவற்றுடன் தேவசம்போர்டு சார்பில் மூலிகை குடிநீர் ஆங்காங்கே வழங்கப்படுகிறது. ஐயப்பா சேவா சங்கம் சார்பிலும் குடிநீர் வழங்கப் பட்டு வருகிறது.