பதிவு செய்த நாள்
14
டிச
2017
11:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மலை உச்சியில் ஏற்றப்பட்ட மஹா தீப கொப்பரை, நேற்று காலை கீழே இறக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா, நவ., 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 2ம் தேதி, 2,668 அடி உயர மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட்டு, தொடர்ந்து, 11 நாள் எரிந்தது. இதை, 40 கி.மீ., வரை பக்தர்கள் கண்டு, தினமும் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தனர். நேற்று முன்தினம் இரவுடன், மஹா தீபம் நிறைவடைந்தது. நேற்று காலை, மலை உச்சியிலிருந்து மஹா தீப கொப்பரை இறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, ஆயிரங்கால் மண்டபத்தில், சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, தீப கொப்பரையில் இருந்து சேகரிக்கப்படும் தீப மை பிரசாதம், திருவாதிரை நட்சத்திரத்தன்று நடராஜருக்கு முதலில் சாற்றப்பட்டு, பின், பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. நெய் காணிக்கை செலுத்திய அனைத்து பக்தர்களுக்கும், தீப மை பிரசாதம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.நெய் காணிக்கை செலுத்தாத பக்தர்கள், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு, கோவில் நிர்வாகம் சார்பில், 10 ரூபாய்க்கு விற்கப்படும் தீப மை பிரசாதத்தை பெற்று கொள்ளலாம்.