பதிவு செய்த நாள்
15
டிச
2017
12:12
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச தேரோட்டம், மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னிமலை முருகன் கோவிலில், ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா, 15 நாட்கள் வெகு விமர்சையாக நடக்கும். வழக்கமாக தைப்பூச தேரோட்டம், அன்று காலை சென்னிமலை டவுன் கிழக்கு ராஜா வீதியில் கைலாசநாதர் கோவிலில் இருந்து, சாமி புறப்பாடு நடந்து, திருத்தேர் வடம் பிடித்து, தெற்கு வீதியில் நிறுத்தப்படும். மாலை மீண்டும், தேர் வடம் பிடித்து, வடக்கு வீதியில் நிறுத்தப்படும். அடுத்த நாள் மாலை திருத்தேர் நிலை சேரும். மூன்று முறை வடம் பிடிக்கப்பட்டு, இரண்டு நாளில் திருத்தேர் நிலை சேருவது, 60 ஆண்டு கால வழக்கமாக உள்ளது. நடப்பாண்டு வழக்கம்போல் தைப்பூச தேரோட்டம் ஜன., 31ல் நடக்கிறது. ஆனால், அன்று மாலை, 4:00 மணிக்கே சந்திரகிரகணம் தொடங்குகிறது. இதனால் முருகன் மலைகோவில் சன்னதி, கைலாசநாதர் கோவில் சன்னதி நடை சாத்தப்படுகிறது. இரவு, 9:30 மணிக்கு புண்ணியாவாசனம் செய்த பிறகே, நடை திறக்கப்படும். அன்றை தினம் மாலை, 5:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்காது. மாறாக, அன்று காலையிலேயே தேர் வடம் பிடித்து, வடக்கு ராஜா வீதியில் நிறுத்தப்படும். மறுநாள் பிப்.,1ல் மாலை, 5:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து, நிலை சேரும். இதை, கோவில் செயல் அலுவலர் அருள்குமார் தெரிவித்துள்ளார்.