மடத்துக்குளம்;மடத்துக்குளம் அருகே, கொமரலிங்கத்திலுள்ள வரலாற்றுச்சிறப்பு மிக்க காசிவிஸ்வநாதர் கோவிலில் நாளை சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. மடத்துக்குளம் அமராவதி ஆற்றங்கரையில், மன்னர் ஆட்சிக்காலத்தில் பல கற்றளி கோவில்கள் கட்டப்பட்டன. வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த கற்றளிகளில், காசிவிஸ்வநாதர் கோவில் மிக சிறப்புடையது. காசியிலிருந்து லிங்கம் கொண்டு வந்து, இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது, இதன் பெருமைகளில் ஒன்று. ஆண்டு முழுவதும் பூஜைகள், வழிபாடுகள் நடந்தாலும், சனிப்பெயர்ச்சி விழா குறிப்பிடத்தக்கது.இவ்விழா நாளை நடக்கிறது. இதுகுறித்து இந்து அறநிலையத்துறையினர் கூறுகையில், ’நாளை (19ம் தேதி) காலை, 9:59 மணிக்கு சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசிக்கிறார். அப்போது, இங்கு, கிழக்கு நோக்கி தனிக்கோவிலில் அருள்பாலிக்கும் சனிபகவானுக்கு கருப்பு வஸ்திரம் அணிவித்து பல்வேறு பூஜைகள் நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்று பக்தர்கள் பயன்பெறலாம்’ என்றனர்.