பதிவு செய்த நாள்
21
டிச
2017
11:12
சென்னை:காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவில், உற்சவர் சிரசு சக்கரம் பாதுகாப்பாகவே உள்ளது. காழ்ப்புணர்ச்சி காரணமாக, ஊடகங்களுக்கு தவறான தகவல் கொடுப்போர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, அறநிலையத் துறை அறிவித்துள்ளது. காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில், புதிய உற்சவர் சிலை செய்ததில், முறைகேடு நடந்து உள்ளதாகவும், பழைய உற்சவர் சிலையில் இருந்த, சிரசு சக்கரம் மாயமாகி விட்டதாகவும், முன்னாள் அறங்காவலர், ரகு என்ற வெங்கடேசன், காவல் துறையிடம் புகார் தெரிவித்து உள்ளார்.இதற்கு, அறநிலையத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: சோமஸ்கந்தர் புதிய சிலை, அறநிலையத் துறை கமிஷனர் உத்தரவுப்படி, தலைமை ஸ்தபதி அறிவுறுத்தலின் படி, 2.12 லட்சம் ரூபாய் மதிப்பில், கோவில் நிதியில் செய்யப்பட்டது.உருவச் சிலை வார்ப்படம் செய்த போது, கோவில் அர்ச்சகர்களால் தங்கம், வெள்ளி ஆகியவை, நேரடியாக போடப்பட்டது. இதற்காக, 5.5 கிலோ தங்கம், யாரிடம் இருந்தும் காணிக்கையாக பெறப்படவில்லை. புதிய உற்சவர் சிலை, வீதி உலாவிற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது. பழைய உருவச் சிலைக்கு, திருவாச்சி எப்போம் கிடையாது. இக்கோவிலில் உள்ள நகைகள், விலை உயர்ந்த பொருட்கள், 1953 முதல், அவ்வப்போது ஆய்வு நடத்தப்படுகிறது. ஆபரணங்கள் அனைத்தும், காப்பீடு செய்யப்பட்டு உள்ளது.அங்குள்ள பழமையான சிலைகள், கண்காணிப்பு கேமராக்கள் வைத்து கண்காணிக்கப்படுகின்றன.
பழைய உற்சவர் சிலையின், சிரசு சக்கரம், பல ஆண்டுகளாக தனியாக உள்ளது. அது தற்போதும், பாதுகாப்பாக உள்ளது. உற்சவர் சன்னதி, முறைக்காரர் வசம் பாதுகாக்கப்படுகிறது.காவல் துறைக்கும், ஊடங்களுக்கும் தவறான தகவல் கொடுத்துள்ள, முன்னாள் அறங்காவலர், ரகு உள்ளிட்ட சிலர், கோவில் வளாகத்தில், அனுமதியின்றி படம் வியாபாரம் செய்தனர்.அதை முறைப்படி அகற்றியதால், கோவில் நிர்வாகத்தின் மீது ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக, தவறான செய்திகளை வெளியிடுகின்றனர். அவர்கள் மீது, சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.