பதிவு செய்த நாள்
22
டிச
2017
12:12
பழநி, பழநி முருகன் கோயிலில் ரூ.ஒரு கோடியே 62 லட்சம் மதிப்பில் நவீன குளியல் வசதிகளுடன் முடிகாணிக்கை மண்டபம் முடிக்கப்பட்டும் திறப்புவிழாவிற்காக முதல்வர் உத்தரவை எதிர்நோக்கியுள்ளனர். திருப்பதிக்கு அடுத்தப்படியாக பழநிமுருகன் கோயிலில் தினமும் பலநுாறு பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்துகின்றனர். தற்போது சரவணப்பொய்கை, சண்முகநதி, பாதவிநாயகர்கோயில், வின்ச் ஸ்டேஷன், தங்கும்விடுதி உள்ளிட்ட இடங்களில் முடிக்காணிக்கை நிலையங்கள் செயல்படுகிறது. இங்கு கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படுகிறது. அதில் கோயில் பங்கு ரூ.4, பிளேடு ரூ.1, நாவிதர் பங்கு ரூ.25 என வழங்கப்படுகிறது. சரவணப்பொய்கை, வடக்குகிரிவீதி, வின்ச் ஸ்டேஷன் போன்ற இடங்களில் தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்காலங்களில் முடிக்காணிக்கை நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
இதனைத் தவிர்ப்பதற்காக தண்டபாணி நிலைய தங்குவிடுதி வளாகத்தில் ரூ.ஒருகோடியே 62 லட்சம் செலவில் முதல்தளத்துடன் நவீன குளியல்அறைகள், பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட தரைத்தளத்துடன் ஒருங்கிணைந்த முடிக்காணிக்கை நிலையம் கட்டப்பட்டுள்ளது. அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டது. திறப்பு விழாவிற்கு முதல்வர் பழனிச்சாமி உத்தரவிற்காக காத்திருப்பதாக கூறுகின்றனர். தைப்பூச விழாவிற்குள்ளாக இந்நிலையம் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். கோயில்அதிகாரி ஒருவர் கூறுகையில், நவீன முடிக்காணிக்கை நிலையத்தில் எலக்ட்ரிக், குழாய்கள் பொருத்தும் பணிகள் நடக்கிறது. எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவின்போது, முதல்வர் பழனிச்சாமி திறந்து வைக்க வாய்ப்புள்ளது என்றார்.