பதிவு செய்த நாள்
22
டிச
2017
12:12
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம், தத்தகிரி முருகன் கோவிலில் நடந்த சனிப்பெயர்ச்சி விழாவில், சிறப்பு பூஜை, பரிகாரம் என்ற பெயரில், பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, தத்தகிரி முருகன் கோவிலில், ஏழடி உயரத்தில் சனீஸ்வரர், பஞ்சமுக ஆஞ்சநேயர், துர்க்கை அம்மன், விநாயகர் உள்ளிட்ட சிலைகள் உள்ளன. கடந்த, 19ல் சனிப்பெயர்ச்சி விழாவுக்கு, ’108 கலச அபி ?ஷகத்துடன் சனிப்பெயர்ச்சி விழா’ என்ற பெயரில், அப்பகுதியை சேர்ந்த ரமேஷ், ராஜேஷ் ஆகியோர் நோட்டீஸ் அச்சடித்துள்ளனர். ஆனால், அன்னதானம், யாகம், பூஜை பூக்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு, உள்ளூர் பிரமுகர்கள் நன்கொடை வழங்கியுள்ளனர். இந்த நோட்டீசை பயன்படுத்தி, ஒரு கும்பல், பல லட்சம் ரூபாயை நூதனமாக மோசடி செய்துள்ளது. இதில், 2,000, 1,000, 500 ரூபாய்க்கு சிறப்பு தரிசனம் செய்யப்படும் என்ற பெயரில், பல வண்ணங்களில் டோக்கன்களை விற்றுள்ளனர். ’யாக பூஜையில் பரிகாரம் செய்கிறோம்’ எனக்கூறி, ஒவ்வொரு குடும்பத்தினரிடமும், 2,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்துள்ளனர். குடும்ப அர்ச்சனைக்கு, 100 ரூபாய் என முன்பதிவு செய்துள்ளனர். மாவட்டம் முழுவதும், 30 லட்சம் ரூபாய் வரை வசூலித்ததாக தெரிகிறது. நோட்டீசில், செயல் அலுவலர் பெயர் இருந்ததால், மக்கள் பணத்தை வழங்கியுள்ளனர். ஆனால், இதுகுறித்து, இந்து அறநிலையத்துறை மற்றும் பராமரிக்கும் ஓங்காரநந்தா குழுவுக்கு விழா முடியும் வரை தெரியவில்லை. கட்டணம் வழங்கியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால், பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பல மணிநேரம் காத்திருந்துள்ளனர். விழா முடிவில், பக்தர்கள் ஆவேசமடைந்து கேள்வி கேட்டதால், வசூலித்த கும்பல் தலைமறைவானது.
இதுகுறித்து, செயல் அலுவலர் கிருஷ்ணன் கூறியதாவது: உபயதாரர்கள் மூலம், விழா நடத்தப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கத்தான் மொபைல் எண் அச்சடிப்பதாக தெரிவித்தனர். ஆனால், நன்கொடையாக பணம் வசூல் செய்த விபரம் எனக்கு தெரியாது. இதுகுறித்து விசாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ரமேஷ், ராஜேஷ் ஆகியோர் கூறியதாவது: நாங்கள், 10 ஆயிரம் நோட்டீஸ் அச்சடித்தோம். பலர், ’பக்தர்களுக்கு கொடுக்க வேண்டும்’ என, நூற்றுக்கணக்கான நோட்டீஸ்களை வாங்கிச் சென்றனர். அதில் யாராவது வசூல் செய்திருப்பார்கள். இதுதொடர்பாக, எங்களிடமும் சிலர் புகார் கூறினர். மற்றபடி வசூல் குறித்து எங்களுக்கு தெரியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.