பதிவு செய்த நாள்
25
டிச
2017
11:12
சென்னை: கிறிஸ்துமஸ் தினம் இன்று(டிச.,25) கொண்டாடப்படுவதையொட்டி, வேளாங்கண்ணி சர்ச் மற்றும் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு நள்ளிரவு வழிபாடு நடந்தது.
இறைவனுக்கு மகிமை இப்புவிக்குச் சமாதானம்: இப்புவிமாந்தரில் பிரியம் என்பதே கிறிஸ்துமஸ் நாளின் முதல் நற்செய்தி கிறிஸ்துமஸ் பண்டிகையின் பின்னணி சுவாரஸ்யமானது. கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை ’கிறிஸ்ட் மாஸ்’ என்னும் வார்த்தைகளின் இணைப்பாகும். கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கி.மு., 7க்கும் கி.மு., 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். யூதர்களின் நாட்காட்டி மூலம் கணக்கிட்டு, யூகத்தின் அடிப்படையில் டிச.25 கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதாக சிலர் தெரிவிக்கின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முதலில் 4வது நுாற்றாண்டை சேர்ந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கொண்டாடியதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன. ஆனால் வேறு சிலர் ஜன.6ல் இயேசு பிறந்ததாகவும் கொண்டாடினர். ஆனால், தற்போது டிச.25ல் கிறிஸ்துமஸ் உலகம் முழுவதும் சிறப்பான நாளாக கொண்டாடுகின்றனர். இந்நாளில் புதிய பணிகளைத் தொடங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கி.பி., 800ல் கிறிஸ்துமஸ் அன்று, சார்லிமேனி என்ற பேரரசர் மன்னராக பதவியேற்றார். அதன்பின் கி.பி., 855ல் இட்முண்ட் என்ற தியாகி மன்னர் ஆனார். 1066ல் இங்கிலாந்து மன்னர் வில்லியம் - 1 மன்னராக முடிசூட்டப்பட்டார். 1377ல் இங்கிலாந்து மன்னர் ரிச்சார்ட்- 2 காலத்தில் கிறிஸ்துமஸை விமரிசையாக கொண்டாடினார். 1643ல் ஆண்டு இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தீவுக்கு ’கிறிஸ்துமஸ் தீவு’ என பெயரிடப்பட்டது.
இப்படி கிறிஸ்துமஸ் பிரபலமடைந்து, உலகமெங்கும் கொண்டாடும் வழக்கம் உண்டானது. பரிசுப் பொருட்களை பரிமாறுவதும், போட்டிகளை நடத்தி மகிழ்வதும் என பல கோணங்களில் கொண்டாட்டம் விரிவடைந்தது. முதன்முதலில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கம், 1510ம் ஆண்டும் ரிகா என்ற இடத்தில் துவங்கியது. 1836ம் ஆண்டு கிறிஸ்துமஸ்க்கு அலபாமா என்ற பகுதியில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. 1840ல் இங்கிலாந்தில் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் வழக்கம் துவங்கியது. கேரல் என்னும் நிகழ்ச்சியில் மக்கள் குழுவாக சேர்ந்து, குழந்தை இயேசுவை வாழ்த்தி பாடல்கள் பாடுவது வழக்கம். 1847ல் பிரான்சில் முதல் கிறிஸ்துமஸ் கேரல் சர்வீஸ் நடந்ததாக தெரிகிறது. இந்த கேரலில் ’ஓ ஹோலி நைட்’ என்ற பாடல் பாடப்பட்டது. கிறிஸ்துமஸ் அன்று, பாரசீக நாட்டில் அடிமைகளுக்கு ஒருநாள் விடுதலை அளிக்கப்பட்டது. சிலர் தங்கள் அடிமைகளை பரிசாக பரிமாறி கொண்டனர். சில எஜமான்கள் கிறிஸ்துமஸ் நாளில், அடிமைகளுக்கு வீட்டில் முழு சுதந்திரம் கொடுத்ததாக வரலாற்று குறிப்புகள் உள்ளது.
பண்டை காலத்தில் ஐரோப்பியருக்கு பேய், பிசாசு, அசுத்த ஆவிகள் உள்ளிட்டவைகளுக்கு அதிகம் பயந்தனர். நீண்ட இரவு கொண்ட நாட்களில் அவை மக்களுக்கு தீமை விளைவிக்கும் என நம்பினர். இதனால் நீண்ட இரவுகளுக்கு பிறகு சூரியன் உதிக்க வேண்டும் என்பதற்காக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர். மொத்தத்தில் அகிலத்தை அன்பு மழையில் நனைக்கத் தோன்றிய அதிரூபன் இயேசுவை கிறிஸ்துமஸ் நன்னாளில் போற்றி மகிழ்வோம்.
தொழுவத்து சர்ச்: இயேசு பெத்லகேம் நகரில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். இந்நகரில் ஏராளமான சர்ச்சுகள் உள்ளன. இருப்பினும், அவர் பிறந்த தொழுவத்தின் மீது ’சர்ச் ஆப் நேட்டிவிட்டி’ என்ற தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் வாழ்வில் ஒரு முறையேனும் இதை கண்டுகளித்து விட வேண்டும் என கருதுகின்றனர்.
முதல் கிறிஸ்துமஸ் குடில்: இயேசு பிறந்ததைப் போல சித்தரிக்கும் கிறிஸ்துமஸ் குடில்கள் விதவிதமான அலங்காரங்களில் அமைக்கப்படும். இதை முதன்முதலாக புனித பிரான்சிஸ் என்பவர் 1722ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.
தொப்பியில் ஸ்டார்: நம் நாட்டில் கிறிஸ்தவர்கள் தங்களின் வீடுகளில் இயேசுவின் வருகையைக் குறிக்கும் விதத்தில் வானத்து நட்சத்திரங்களை அலங்கரித்து தொங்க விடுவர். ஸ்வீடன் நாட்டில் இப்படி செய்வதில்லை. அதற்கு பதிலாக தொப்பிகளில் வெள்ளியால் செய்யப்பட்ட நட்சத்திரங்களை ஒட்டிக் கொண்டு செல்வர். வெயிலிலும், விளக்கொளியிலும் அவை பளபளவென மின்னும்.
இயேசு கடவுளானது எப்போது: இயேசு கிறிஸ்து, 33 வருடங்கள் பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து அற்புதம் செய்தார். மனிதன் பாவமன்னிப்பை பெற ஆட்டையும், மாட்டையும், பறவைகளையும் பலியாக கடவுளுக்கு செலுத்தி வந்தான். எனவே இயேசு மனிதனாகப் பிறந்து உலக மக்களின் பாவப்பலியாக சிலுவை சரணத்தை ஏற்றுக் கொண்டார். மூன்றாம் நாளில் உயிர்த்து எழுந்து 40 நாட்கள் மக்களுக்கு காட்சி தந்தார்.இயேசுவின் மறைவிக்குப் பின் சுமார் 300 ஆண்டுகள் கழித்து ரோம அரசு அவரை கடவுளாக ஏற்றுக் கொண்டது. ’இயேசு’ என்பதற்கு ’விடுதலையாக்குபவர்’ என்றும் ’கிறிஸ்து’ என்பதற்கு ’தீர்க்கதரிசி’ என்றும் அர்த்தம்.
பைபிள் சுவையான தகவல்: பிப்லியா என்ற கிரேக்க வார்த்தையே ’பைபிள்’ என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. தமிழில் ’வேதாகமம்’ என்பர். ’பிப்லியா’ என்றால் ’புத்தகம்’ அல்லது ’பத்திரம்’ என்று பொருள். பத்திரம் போல் பாதுகாக்கப்பட வேண்டிய புத்தகம் என்ற பொருளில் இதைச் சூட்டியிருக்க வேண்டும். பைபிளை எழுதி முடிக்க 1200 ஆண்டுகள் ஆயின. வெவ்வேறு காலங்களில் 40 பேர் இதை எழுதியுள்ளனர். இதில் பலரது பெயர் கூட தெரியவில்லை. இதை பழைய, புதிய ஏற்பாடு என இரண்டாகப் பிரித்தனர். இரண்டிலும் 1189 அதிகாரங்களும், 31 ஆயிரத்து 102 வசனங்களும் உள்ளன.
தமிழில் பைபிளை மொழி பெயர்த்தவர் சீகன் பால்கு என்ற ஜெர்மனி அறிஞர். கி.பி.1705ல் இவர் தமிழகத்திலுள்ள தரங்கம்பாடி வந்தார். 1708 ல் தமிழில் பைபிளை மொழி பெயர்க்க ஆரம்பித்து, 1711ல் முடித்தார். அவர் மொழி பெயர்த்த ஒரிஜினல் புத்தகங்கள் வாடிகன் நுாலகத்தில் இப்போதும் உள்ளது. முதலில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்த அவர், பின் பழைய ஏற்பாட்டையும் மொழி பெயர்த்தார். 1719ல் அவர் இறந்து விட்டதால், அவரது நண்பர் பெஞ்சமின் ஸ்கல்ஸ் என்பவர் அப்பணியை தொடர்ந்து முடித்தார்.
600 டன் கிறிஸ்துமஸ் மரம்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சியாரா ரெவடா என்ற மலை இருக்கிறது. இங்குள்ள கிங்ஸ் கேனின் தேசியப்பூங்காவில் குண்டூசி முனையளவு விதை போட்டு, 600 டன் எடையுள்ள கிறிஸ்துமஸ் மரத்தை வளர்த்துள்ளனர். பெத்லகேமில் இயேசு பிறந்தபோதே, இந்த விதையை ஊன்றி விட்டார்கள். இதை ’செக்கோயா’ மரம் என்பர். அடிப்பாகத்தில் இந்த மரத்தின் குறுக்களவு 40 அடி. 15 பேர் சுற்றி நின்றால் தான் இதைப்பிடிக்க முடியும். கிறிஸ்துமஸ் மரத்தை வளர்க்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தியவர் மார்டின் லுாதர். 1840ம் ஆண்டு முதல் உலகெங்கும் கிறிஸ்துமஸ் மரம் நடும் பழக்கம் உருவானது.