நபிகள் நாயகம் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம், நன்றி என்ற சொலலிற்குரிய மகத்துவத்தை உணர்த்துகிறது. ஒருமுறை நாயகம் ஒரு வீட்டிற்கு சென்றார். அவ்வீட்டில் ஒரு குவளை தண்ணீர் வாங்கி குடித்தார். குடித்து முடித்ததும், இப்போது நான் பருகிய தண்ணீருக்கு அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லாவிட்டால், மறுமை நாளில் இதனைக் குறித்து அல்லாஹ் கேள்வி கேட்பான்,” என்றார். இதில் இரண்டு முக்கிய கருத்துகள் ஒளிந்து கிடக்கின்றன. உலகில் தண்ணீரைப் போல உயர்ந்த பொருள் எதுவும் இல்லை. மயக்கமடைந்து கிடக்கும் ஒருவன் முகத்தில் தண்ணீர் தெளிக்கிறார்கள். அவன் உடனே கண்விழித்து விடுகிறான். அவனுக்கு சிறிது தண்ணீர் புகட்டுகிறார்கள். அவன் சுதாரித்து எழுந்து விடுகிறான். இது தண்ணீரை பாதுகாக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
தண்ணீரை சிலர் அற்பமாக பார்க்கின்றனர். அவர்களுக்கும் நாயகம் ஒரு கருத்தை சொல்கிறார். சாதாரண தண்ணீரைத் தானே இறைவன் கொடுத்தார். இது என்ன பெரிய விஷயம்! நமக்கென்ன பொன்னையும், பொருளையுமா அள்ளிக் கொடுத்தார்,” என்று எண்ணக்கூடாது. இறைவன் நமக்கு அற்பமான பொருளைக் கொடுத்தாலும் கூட, காரணத்தோடு தான் கொடுப்பார். நமக்கு இறைவன் துன்பத்தையே தந்தால் கூட, “இந்த துன்பத்தை தந்ததன் மூலம், எனக்கு வாழ்க்கையில் அனுபவப்பாடத்தை கற்றுத் தந்த இறைவா, உனக்கு நன்றி. இந்த துன்பத்தை அனுபவிக்க வைத்ததன் மூலம் என் பாவங்களை குறைத்ததற்காக நன்றி,” என்று சொல்ல வேண்டும்.