மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் நாளில் பாடும் கீதங்களுக்கு சரித்திரம் உண்டு. எல்லா பாடல்கள் பற்றிய சரித்திரம் கிடைக்காவிட்டாலும் சில பாடல்களுக்கு மட்டும் கிடைத்திருக்கின்றன. 1818ல் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முதல் நாள், ஆஸ்திரியாவிலுள்ள ஓபெர்ண்டாட் என்ற ஊரில் இருந்த சர்ச் வளாகத்தில் தங்கியிருந்த ஜோசப் மோகர் என்ற பாதிரியார் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். வெளியே பனி கொட்டிக் கொண்டிருந் தது. அப்போது ஒரு பெண், தன் பக்கத்து வீட்டில் பிறந்த குழந்தைக்கு, பெயர் வைப்பதற் காக அவரை அழைக்க வந்தார். பாதிரியாரும் அவளும் குறுகலான ஒரு பாதையில் நடந்தனர். மாலை வேளை நெருங்கி விட்டதால் நட்சத்திரங்கள் கண் சிமிட்டத் துவங்கின. அந்த கண்கொள்ளாக் காட்சியைக் கண்டவராக குழந்தையின் வீட்டிற்குள் சென்றார் பாதிரியார்.
வீட்டிற்குள் நுழைந்ததும், இயேசுவின் வடிவம் அவர் மனக்கண்ணில் தெரிந்தது. அந்த சூழ்நிலையை ஒரு பாடலாகப் பாடினார். சைலன்ட் நைட், ஹோலி நைட் (இதுஒரு அமைதியான இரவு, புனிதமான இரவு) என்ற பாடலை பாடிமுடித்தார். முதல் உலகப்போரின்போது கிறிஸ்துமஸ் இரவில் ஆங்கிலேய படை வீரர்கள் இந்த பாடலை இனிய ராகத்துடன் பாடினர். இதைக்கேட்ட ஜெர்மன் வீரர்கள் தாங்களும் மெய்மறந்து பாடினர். இரண்டு எதிரிப் படைகளும் இந்தப் பாடலைப் பாடியதன் விளைவாக, அன்று முதல் தற்காலிகமாக போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஓ! பெத்லகேமே! சிற்றூரே! என்னே உன் அமைதி! (ஓ லிட்டில் டவுன் ஆப் பெத்லகேம்!) என்னும் இன்னொரு பாடல் பிறந்த கதை இன்னும் சுவையானது.
அது ஒரு கிறிஸ்துமஸ் காலம். பெத்லகேம் நகரம் பயணிகளால் நிறைந்திருந்தது. நள்ளிரவு.... அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். ஒரே ஒரு பயணி மட்டும் தூக்கம் வராமல் அருகிலுள்ள குன்றின் மீது ஏறி பெத்லகேம் நகரின் அழகை ரசிக்கத் துவங்கினார். அந்த இனிய சூழ்நிலையை பாடினார். நேரம் போனதே தெரியவில்லை. இரவு ஆராதனைக்கு ஆலய மணி ஒலித்தது. அந்த சத்தத்தைக் கேட்ட பிறகுதான் அவர் தன்னிலைக்குத் திரும்பினார். அந்த இனிய பாடலுக்கு லூயி ரெட்னர் என்பவர் இசை அமைத்தார். உலகம் முழுவதும் அது பிரபலமானது.