ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் கூட்ட நெரிசலை சமாளிக்க 5 தீர்த்த கிணறுகளை மூடியதால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். தினமும் சராசரியாக 15 ஆயிரம், விடுமுறை நாளில் 25 முதல் 30 ஆயிரம் பக்தர்கள் நீராடுகின்றனர்.
தற்போது பள்ளி விடுமுறை, ஐயப்ப பக்தர்கள் வருகையால் கடந்த சில நாட்களாக கோயிலில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர். கூட்ட நெரிசலை சமாளிக்க கோயில் நிர்வாகம் நேற்று, 2 முதல் 6 வரை உள்ள தீர்த்த (சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி, சங்கு, சக்கர தீர்த்தங்கள்) கிணறுகளை மூடியது. இதனால் 17 தீர்த்தங்களில் மட்டுமே நீராட முடிந்ததால், பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
கோயிலில் அடிக்கடி 5 தீர்த்தங்களை மூடுவதை தவிர்க்க, கோயில் 2ம் பிரகாரம் வடக்கு பகுதி யில் ரூபாய் 12 லட்சம் செலவில் புதியதாக 1 முதல் 6 வரை உள்ள தீர்த்த கிணறுகள் தோண்ட அக்.,28 ல் பூமி பூஜை நடந்தது. ஆனால் பணி கிடப்பில் உள்ளதால், 22 தீர்த்தத்திலும் நீராட முடியாத அவலம் உள்ளது.
இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன் கூறியது: கூட்ட நெரிசலை காரணம் கூறி அடிக்கடி கோயிலுக்குள் 5 தீர்த்த கிணறுகளை மூடுவதால், பக்தர்கள் அனைத்து தீர்த்தத்திலும் நீராட முடியவில்லை. புதிய தீர்த்த கிணறுகளை தோண் டும் பணியை துரிதப்படுத்தி, ஆன்மிக மரபுபடி அனைத்து தீர்த்தத்திலும் பக்தர்கள் நீராட அற நிலையதுறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.