பதிவு செய்த நாள்
19
டிச
2011
12:12
மதுரை : மதுரையில் அனைத்து உயிர்களுக்கும் படியளக்க, நேற்று அஷ்டமி சப்பரத்தில் சுவாமியும், அம்மனும் உலா வந்தனர். ஒரு சமயம் உலகத்தில் அனைத்து உயிர்களுக்கும் படியளக்க சிவபெருமான் புறப்பட்டார். அவரை சோதிக்க நினைத்த அம்மன், பாத்திரத்தில் எறும்பு ஒன்றை அடைத்து வைத்தார். எல்லா உயிர்களுக்கும் படி அளந்த திருப்தியில் திரும்பிய சிவபெருமானிடம், "ஒரு உயிருக்கு மட்டும் நீங்கள் படியளக்கவில்லை, என்றார் அம்மன். பாத்திரத்தை திறந்து பார்த்தபோது, அந்த எறும்புக்கு அருகிலும் அரிசி இருந்தது. இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், மார்கழி தேய்பிறை அஷ்டமி நாளில் சுவாமியும், அம்மனும் மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் வகையில் உலா வருவர். இந்நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதிகாலை கோயிலில் இருந்து இருவரும் புறப்பாடாகி, கீழமாசிவீதி வந்தனர். அங்கு இரு சப்பரங்களில், சிவபெருமான் தங்க ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி யானைக்கல், வடக்கு வெளிவீதி, கீழவெளிவீதி, தெற்கு வெளி வீதி, திருப்பரங்குன்றம் ரோடு,மேலவெளிவீதி, குட்ஷெட் தெரு, நாயக்கர் புதுத்தெரு, வக்கீல் புதுத்தெரு, கீழமாரட் வீதி, காமராஜர் ரோடு, விளக்குத்தூண் வழியாக தேரடிக்கு வந்தனர். வரும் வழியில், ஜீவராசிகளுக்கு படியளக்க, பக்தர்கள் ரோட்டின் இருபுறமும் அரிசியை தூவியும், அதை எடுத்தும் வழிபட்டனர்.