பதிவு செய்த நாள்
19
டிச
2011
11:12
இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களின் சொத்துகள் குறித்து கணக்கெடுத்து, அவற்றை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து மீட்கும் பணியில், வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமாக 848 கோவில்களும், 12 மடங்களும் உள்ளன. இதில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்ட கோவில்கள் மூன்றும், 5 முதல் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்ட கோவில்கள் 93ம், 10 ஆயிரம் ரூபாய்க்குள் வருமானம் கொண்ட கோவில்கள் 748ம், மடங்கள் 12ம் உள்ளன.
ஆக்கிரமிப்புகள் : இந்த கோவில்களுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மாவட்டத்தில் உள்ளன. இவை பல பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது. பல கிராமங்களில் கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கான குத்தகை பாக்கியை யாரும் கோவிலுக்கு தருவதில்லை. மேலும், கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளவர்களுக்கு ரேஷன் கார்டும், மின் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆக்கிரமிப்பாளர்கள், தாங்கள் அனுபவித்து வரும் வீடுகளுக்கு பட்டா கேட்டு வருகின்றனர். இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களின் சொத்துகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களின் நிலங்கள் குறித்தும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்த வருவாய் துறையினருக்கு அரசு உத்தரவிட்டது.
கணக்கெடுப்பு தீவிரம் : ஒவ்வொரு பகுதிக்கும் வருவாய் துறையினர் நேரில் சென்று, கோவிலுக்கு சொந்தமான சொத்துகளின் அசல் பத்திரம், வரைபடம், அதில் உள்ள ஆக்கிரமிப்புகள், ஆக்கிரமிப்பாளரின் விவரம், கோவில் இடத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகள், அனுபவதாரரின் விவரம், எத்தனை ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர், குத்தகை பாக்கி எவ்வளவு போன்ற விவரங்களை கணக்கெடுத்து வருகின்றனர். இக்கணக்கெடுப்பு பணி முடிந்ததும் கோவில்களின் சொத்துகள் குறித்த புள்ளி விவரங்கள் கலெக்டரிடம் வழங்கப்படும். பின் மாநில இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கலெக்டர்கள் பைலை ஒப்படைப்பர் என தெரிகிறது.
இதுகுறித்து கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள திருவள்ளூர் சப்-கலெக்டர் சித்ரசேனன் கூறும்போது, ""அரசு உத்தரவுப்படி இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிலங்கள், சொத்துகள், கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. பணி முடிந்ததும் இத்தகவல்கள் கலெக்டரிடம் ஒப்படைக்கப்படும், என்றார்.