மாவூற்று வேலப்பர் கோயிலில் குளியலறை... அமைக்கப்படுமா.. எதிர்பார்ப்பில் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2018 02:01
ஆண்டிபட்டி : மாவூற்று வேலப்பர் கோயிலில் ஆண், பெண் பக்தர்களுக்கு குளியலறை அமைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தெப்பம்பட்டி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். மருத மரங்களின் வேர்பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனை இக்கோயிலின் சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் தேதி மற்றும் தொடர்ந்து வரும் ஐந்து வாரங்களிலும் விழா நடைபெறும்.
மாவட்டத்தின் பல பகுதியில் இருந்தும் வெளி மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கூடுவர். அவர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். மாதாந்திர கார்த்திகை, பவுர்ணமி, அமாவாசை நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக கோயிலுக்கு பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வருகின்றனர். அவர்கள் இங்குள்ள சுனை நீரில் நீராடி வேலப்பரை வழிபட்டு செல்வர். மலைப்பகுதியில் குறைவான மழையால் சுனையில் அதிக அளவு நீர் சுரப்பு இல்லை. இதனால் விழாக் காலத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் குளிப்பதற்கு சிரமம் ஏற்படுகிறது. கோயில் வளாகத்தில் ஆண், பெண் பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக தனித்தனி குளியலறை அமைக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.