பதிவு செய்த நாள்
03
ஜன
2018
12:01
சேலம்: சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள சிவாலயங்களில், நேற்று நடந்த ஆருத்ரா தரிசனத்தில், ஓம் நமச்சிவாய கோஷம் எழுப்பி வழிபட்டனர். சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் காலை முதல், நடராஜருக்கு சிறப்பு பூஜை நடந்தது. நள்ளிரவு, 12:00 மணிக்கு பால், இளநீர், பன்னீர் உள்ளிட்ட, 64 வகை பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று காலை, நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிகள், முதல் அக்ரஹாரம் வழியாக, அம்மாபேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணியர் கோவிலை சென்றடைந்தனர். அங்கிருந்து, பட்டைக்கோவில் வழியாக, கிச்சிப்பாளையம் குஞ்சு மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலம் சென்று, இரவு, 8:00 மணிக்கு மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். வழிநெடுகிலும் திரண்டு, ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். இன்று காலை, 10:00 மணிக்கு மகா அபி?ஷகம் நடக்கிறது. இதேபோல், அம்மாபேட்டை செங்குந்தர் சுப்பிரமணியர், இரண்டாவது அக்ரஹாரம் காசி விஸ்வநாதர், குகை அம்பலவாணர், செவ்வாய்ப்பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், மீனாட்சி சொக்கநாதர், உத்தமசோழபுரம் கரபுரநாதர், பூலாம்பட்டி கைலாசநாதர், ஓமலூர் அண்ணாமலையார், காசி விஸ்வநாதர் கோவில், வைத்தீஸ்வரன், பனமரத்துப்பட்டி, நத்தமேடு சிதம்பரேஸ்வரர், ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், தலைவாசல் காமநாதீஸ்வரர் உள்பட, மாவட்டம் முழுவதும் உள்ள சிவாலயங்களில், ஆருத்ரா தரிசனம் கோலாகலமாக நடந்தது. குடும்பத்துடன் பங்கேற்ற பக்தர்கள், ஓம் நமச்சிவாய கோஷம் எழுப்பி, சுவாமியை வழிபட்டனர்.