பதிவு செய்த நாள்
05
ஜன
2018
12:01
ப.வேலூர்: கபிலர்மலை, பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், முறிந்து விழுந்த கொடி மரம், எப்போது நிறுவப்படும் என, பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ப.வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 2016, ஏப்., 6 இரவு, வீசிய சூறாவளிக் காற்றில், கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்த, கொடிமரம் முறிந்து விழுந்தது. சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் பக்தர்கள் ஏதேனும் அசம்பாவிதம் நிகழுமோ என, அச்சமடைந்தனர். இந்து சமய அறநிலையத்துறையினர், மறுநாள் காலை, சிறப்பு பரிகார பூஜைகளை செய்து, புதிய கொடிமரம் நிறுவுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். பின், கேரளாவிலிருந்து, 40 அடி உயரமுள்ள வேங்கை மரத்தினை வாங்கி வந்து, காயவைத்து, செதுக்கி கொடிமரத்திற்குண்டான வடிவம் கொடுக்கப்பட்டது. நவ.,30ல், கொடிமரம் நிறுவுவதற்கு தயார் நிலையில் உள்ளதென கூறப்பட்டது. ஆனால், அன்றைய தினமும் நிறுவப்படாதது, பக்தர்களிடையே சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது: தைப்பூச தேர்த்திருவிழாவிற்கு முன், கொடிமரத்தில் கொடியேற்றப்படுவது வழக்கம். அதற்கு, மூன்று வாரங்களே உள்ள நிலையில் அதற்கான வேலைகள் மந்தகதியில் நடக்கின்றன. கொடிமரம் ஆகம விதிமுறைப்படிதான் நிறுவப்படுகிறதா அல்லது அதிகாரிகள் அலட்சியப்போக்கால், அவசரகதியில் நிறுவப் படுகிறதா என, தெரியவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர். இதுகுறித்து, செயல் அலுவலர் சாந்தி கூறுகையில், கொடிமரம் நிறுவுவதற்காக, உயரதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இன்னும், அனுமதி கிடைக்கவில்லை. கொடியேற்றுவதற்கு, மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. ஜன., 31க்கு முன்னதாகவே நிறுவப்படும், என்றார்.