பதிவு செய்த நாள்
05
ஜன
2018
05:01
திருப்பூர் ·:முருகம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா, வானவேடிக்கையுடன் கோலாகலமாக நடைபெற்றது.அவிநாசி, வஞ்சிபாளையம் அருகேயுள்ள முருகம்பாளையத்தில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பொங்கல் விழா, கடந்த, 2ம் தேதி துவங்கியது; அன்றிரவு, 9:00 மணிக்கு பொட்டு சாமிக்கு பொங்கல் வைத்து, ஊர் சுற்றி சோர் எறிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, கிழக்கு பிள்ளையார் கோவில் இருந்து பஞ்ச வாத்தியங்கள் முழங்க, சக்தி கும்பம் அலங்கரித்து, அம்மன் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
நேற்று முன்தினம் மாலை, பல்வேறு திரவியங்களால் அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்; மகா தீபாராதனை நடந்தது. அன்றிரவு, அம்மன் மெரமனை எடுத்தல் நிகழ்ச்சியும், மாவிளக்கு ஊர்வலம் மற்றும் வானவேடிக்கைகள், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று அதிகாலை, நூற்றுக்கணக்கான பெண்கள் கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். நேற்று மாலை, கும்பம் நதிக்கரைக்கு எடுத்து செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. பொங்கல் விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ மாகாளியம்மன் சேவா அறக்கட்டளை, விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.