பதிவு செய்த நாள்
05
ஜன
2018
05:01
மதுரை, மதுரையில் சத்குரு சங்கீத சமாஜத்தின் 66 வது ஆண்டு இசைவிழா நேற்று துவங்கியது. ஜன.,13 வரை இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தல்லாகுளம் லட்சுமிசுந்தரம்ஹாலில் நடந்த துவக்க விழாவிற்கு சமாஜ துணை தலைவர் கணபதிசர்மா தலைமை வகித்தார். செயலாளர் வெங்கட நாராயணன் வரவேற்றார். கடந்த மாதம் நடந்த பரதம், வாய்பாட்டு, வயலின், மிருதங்க போட்டிகளில் வெற்றி பெற்ற 100க்கும் மேற்பட்டவர்களுக்கு, வாய்ப்பாட்டு கலைஞர் டாக்டர் பந்துலா ரமா பரிசு வழங்கினார். விழா துவக்கமாக வாய்ப்பாட்டு பந்துலாரமா, வயலின் மூர்த்தி, மிருதங்கம் ரவி, கடம் கிருஷ்ணகுமார் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடந்தது. செயலாளர் ராஜாராம் நன்றி கூறினார்.
பொருளாளர் சிவராமன், மேலாளர் சந்திரசேகரன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர். ஜன.,13 வரை தினமும் மாலை 6:00 மணிக்கு இசை நிகழ்ச்சி நடைபெறும். ஜன.,5 மற்றும் 7 முதல் 12 ம் தேதி வரை காயத்ரி வெங்கட்ராமன், ஜெயஸ்ரீ ராம்நாத், சாகேதராமன், ராமகிருஷ்ண மூர்த்தி, சஞ்சய் சுப்பிரமணியன், கர்நாட்டிக் சகோதரர்கள் சசிகிரண், கணேஷ் ஆகியோரின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடைபெறும். ஜன.,6 ல் ஜெயந்தின் புல்லாங்குழல், ஜன.,10ல் கடம் வித்வான் விக்கு விநாயக்ராம் தலைமையில் லய சமர்ப்பணம் நிகழ்ச்சி நடைபெறும். இறுதி நாள் நிகழ்ச்சியாக ஜன.,13 அன்று பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் சங்கீத பட்டிமன்றம் நடைபெறும். இசைவிழா ஏற்பாட்டினை சமாஜ நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.