பதிவு செய்த நாள்
06
ஜன
2018
12:01
மேட்டுப்பாளையம்:கா.புங்கம்பாளையத்தில் உள்ள திம்மராயப்பெருமாள் கோவிலில், நாளை மார்கழி, 23ம் நாள் வழிபாடு நடக்கிறது. இதில், மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்... என்ற திருப்பாவை பாடலை, பக்தர்கள் பாடுகின்றனர்.காரமடை அருகே கா.புங்கம்பாளையத்தில் திம்மராயப்பெருமாள் கோவில் உள்ளது. இங்கு திருப்பதியில் உள்ள சீனிவாசப் பெருமாள் சுவாமியை போன்று மூலவரும், திம்மராயப்பெருமாள் நீலாதேவி, பூமாதேவி சமேத உற்சவருமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ராமநவமி, சித்திரை மாத கடைசி சனிக்கிழமை, கிருஷ்ண ஜெயந்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட விசேஷ நாட்களில், சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதத்தில் ஐந்து சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகளும், திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.
கார்த்திகை தீபம், பவுர்ணமி பூஜை, பிரதி மூல நட்சத்திரம், ஆஞ்சநேயருக்கு பூஜை, மார்கழி மாதம், 30 நாட்களும் அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறந்து திருப்பள்ளியெழுச்சியும், அதைத் தொடர்ந்து திருப்பாவை பாடலும் பாடப்பட்டு வருகிறது. மார்கழி மாதத்தின், 23ம் நாளான நாளை காலை, மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்... எனத் துவங்கும் திருப்பாவை பாடலை, பக்தர்கள் பாடுகின்றனர்.மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில், உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரியை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து, கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது.அதுபோல கண்ணா...நீயும் வீரநடை போட்டு உன் கோவிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகள் கொண்ட சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளை பரிசீலனைசெய்து, நிறைவேற்றி அருள வேண்டுகிறோம் என்பதே இப்பாடலின் பொருள்.