பதிவு செய்த நாள்
06
ஜன
2018
12:01
குன்னுார்: குன்னுார் அருகே உள்ள காரக்கொரையில் பூ குண்ட திருவிழா கோலாகலமாக நடந்தது.நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகர் இன மக்கள், ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில், பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். பாரம்பரியமாக நடந்து வரும் இந்த பண்டிகை பேரகணி, ஜெகதளா, ஒன்னதலை, பெத்துவா, தாவணெ, குந்தா, சின்னகுன்னுார், எப்பநாடு, கேத்தி, பந்துமை ஆகிய, 14 கிராமங்களில் நடந்து வருகிறது. இவற்றில் கன்னி ஹெத்தையம்மன் கோவில் அமைந்துள்ள ஜெகதளாவில், ஹெத்தையம்மன் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிகொரை, மஞ்சுதளா, மேல் பிக்கட்டி, கீழ் பிக்கட்டி ஆகிய எட்டு கிராமங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நடத்தப்படும் இந்த திருவிழாவில், 150க்கும் மேற்பட்டவர்கள், 48 நாட்கள் விரதம் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், காரக்கொரை மடிமனையில் நேற்று நடந்த பூகுண்டம் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பின்பு சிறப்பு பூஜை நடத்தி, கோவில் பூசாரி மற்றும் கும்பம் எடுத்து வந்த பூசாரி உட்பட, 11 ஹெத்தைக்காரர்கள் பக்திபரவசத்துடன் குண்டம் இறங்கினர். குண்டம் இறங்கியவர்களின் காலில் விழுந்து மக்கள் ஆசி பெற்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.