பதிவு செய்த நாள்
08
ஜன
2018
11:01
பழநி: பழநி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் நலன்கருதி மலைக்கோயில் மற்றும் உபகோயில்களில் சிறப்பு பூஜைகள் ஒருவாரம் நடக்கிறது. பாதயாத்திரைக்கு உலகப்புகழ் பெற்ற பழநி தைப்பூச விழா வரும் ஜன.,25ல் துவங்கி பிப்.,3 வரை நடக்கிறது. இதற்காக முருக பக்தர்கள் விரதம் இருந்து, பழநிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். பொங்கல் பண்டிகை, தைப்பூசவிழா நாட்களில் லட்சக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு விரதம் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் நலன்வேண்டி பழநிமலைக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு யாகபூஜைகள் நடக்கிறது. இவ்வாண்டு ஜன.,6 முதல் ஜன.,13வரை நடக்கிறது. நேற்று மலைக்கோயிலில் ஆனந்தவிநாயகர் சன்னதியில் அமிர்தம் குருக்கள், செல்வசுப்ரமணியம் முன்னிலையில் பாதயாத்திரை பக்தர்கள் நலன்வேண்டி சிறப்பு யாகபூஜை, கணபதிஹோமத்துடன் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகாதீபாராதனை நடந்தது. இன்று அடிவாரம் வீரதுர்க்கையம்மன், கிரிவீதி அழகுநாச்சியம்மன்கோயில், மகிஷாசூரமர்த்தினி, பாதவிநாயகர்கோயில் உள்ளிட்ட கோயிலில் ஜன.,13 வரை அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா செய்கின்றனர்.