பதிவு செய்த நாள்
08
ஜன
2018
02:01
பழநி : தைப்பூச விழாவை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். குறைகளை தெரிவிக்க இலவச தொலைபேசி அறிமுகப்படுத்தப்படும் என்று, இந்துசமய அறநிலைத்துறை ஆணையர் ஜெயா தெரிவித்தார். பழநி தைப்பூசத் திருவிழா, ஜன.,25ல் முதல் பிப்.,3வரை நடக்கிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் ஆணையர் ஜெயா தலைமையில் நடந்தது.
திண்டுக்கல் மாவட்டகலெக்டர் வினய், எஸ்.பி.,சக்திவேல், இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா, சப்கலெக்டர் அருண்ராஜ் பங்கேற்றனர்.
இணை ஆணையர்: பக்தர்கள் கூடும் இடங்களில் சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்துதரப்பட்டுள்ளது. குளிக்க சண்முகாநதி, இடும்பன்குளத்தில் வசதிகள் செய்துதரப்படும். ஜன.,30, 31ல் யானைப்பாதை வழியாக பக்தர்கள் மலைக்கோயில் சென்று தரிசனம் செய்து, படிப்பாதை வழியாக இறங்க ஏற்பாடு செய்கிறோம். ஜன.,31ல் பகல் ஒரு மணிவரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப் படுவர்.
ஆணையர் ஜெயா: சண்முகநதி, இடும்பன்குளம் மிகவும் அசுத்தமாக உள்ளது பொதுபணித்துறை அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். அதனை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். பாதயாத்திரைக்கான நடைபாதையை சரி செய்ய வேண்டும். குடிநீர், கழிப்பறை, மருத்துவ வசதிகளை செய்துதர வேண்டும். விபத்து பலி, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும். தரமான அன்னதானம் வழங்குவதை ஆய்வுசெய்ய வேண்டும். பக்தர்களின் குறைகளை தெரிவிக்க இலவச டோல் பிரீ எண்ணும், தனி கட்டுப்பாட்டு அறையும் ஏற்படுத்தப்படும். நகராட்சி ஆணையர் ஜோதிக்குமார்: சுகாதார பணிக்காக கூடுதலாக பணியாளர்கள் நியமனம் செய்கிறோம். தேவையான மருத்துவம், குடிநீர் வசதி செய்துதரப்படும். இலவச கழிப்பறை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
கூடுதல் எஸ்.பி., சீனிவாசன்: கடந்த ஆண்டு போல குற்றச்சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா, கோபுரங்கள் வைக்கப்படும். நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். கூட்டம் அதிகமுள்ள இடங்களில் சீருடை அணியாத போலீசார் இருப்பர். கிரிவீதியில் தடுப்பான்கள் அமைத்து, எளிதாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
கலெக்டர்: பழநி - திண்டுக்கல் ரோட்டில் தரைப்பாலம் பணியை உடனடியாக முடிக்க வேண்டும். ஒட்டன்சத்திரம், செம்பட்டி, திண்டுக்கல் சந்திப்பு என பிரித்து ஒளிரும் குச்சிகள் வழங்கப்படும், என் றார். மேலும் தைப்பூசவிழாவிற்கு சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கவேண்டும், நடமாடும் மருத்துவ குழுவினர் தேவை எனவும் வலியுறுத்தப்பட்டது.