பதிவு செய்த நாள்
09
ஜன
2018
11:01
கிணத்துக்கடவு அடுத்துள்ள சொலவம்பாளையம் கிராமத்தின் தென்மேற்கு பகுதியில், கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது சாத்துார் பெருமாள் சுவாமி கோவில்.300 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் திருப்பணிகளுக்கு பின், கடந்த, 2006ல் கும்பாபிேஷகம் நடந்தது. வரும் வைகாசியில் மீண்டும் கும்பாபிேஷகம் நடத்த ஏற்பாடு நடக்கிறது. கோவில் கருவறையில் சங்கு, சக்கரத்தை இரு கைகளில் ஏந்தியும், மற்ற இரு கரங்களை அபய,வரதகஷ்ட வடிவில் வைத்தும் பெருமாள் அருள்பாலிக்கிறார். அர்த்த மண்டபம், மகா மண்டபங்களை தாண்டி, கோவிலுக்கு வெளியே மூலஸ்தான பார்வையில், சங்கு சிற்பத்துடன் கருடகம்பம் அமைக்கப்பட்டுள்ளது. பெருமாளின் வலது பக்கம் கன்னிமூலையில், தும்பிக்கையாழ்வார் சன்னதி அமைந்துள்ளது.சனிக்கிழமைகளில், கோவில் திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, பூ கேட்பு நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.பக்தர்கள் பெருமாளை தரிசிக்க வரும்போது, சுவாமிக்கு உகந்த துளசிமாலை, ரோஜாமாலை மற்றும் ஆண்டாள் மாலையுடன் வருகின்றனர். பால், தயிர், தேன், பன்னீர், திருமஞ்சனம், இளநீர், சந்தனம், மஞ்சள் மற்றும் பஞ்சாமிர்த அபிேஷகம் நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதமாக குங்குமம் வழங்கப்படுகிறது. தலவிருட்சமாக, அரசமரம், வேப்பமரங்கள் உள்ளன.பவுர்ணமி, புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி, மாசிமகம் நாட்களில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.மனதில், சங்கடங்களுடன் கோவிலுக்கு வருபவர்கள், தங்கள் குறைகளை பெருமாள் பாதங்களில் சமர்ப்பித்து, தீர்த்து வைக்க வேண்டுகின்றனர். சன்னதியில், கண்மூடி அமர்த்து பகவானை நினைத்து தியானத்தில் ஈடுபடுவோருக்கு, மன நிம்மதியும், பிரச்னைகளுக்கு தீர்வையும் பெருமாள் அருள்வதாக பக்தர்கள் கூறுகின்றனர். செல்லும் காரியம் வெற்றியடையவும், மனக்குறையை தீர்க்கவும், பெருமாள் குடியிருக்கும் கோவில் கோபுரத்தை கையெடுத்து வணங்காதவர்கள் இல்லை.